விஜயன் விசா பெற்றுக்கொண்டு ஸ்ரீலங்கன் விமானத்திலா இலங்கைக்கு வந்தார்? பாராளுமன்றத்தில் மனோகணேசன் கேள்வி

விஜய இளவரசன் உள்ளிட்டோர் விசா வாங்கிக்கொண்டா இலங்கை வந்தார்கள்? படகில் வராமல், அவர்கள் என்ன, ஸ்ரீலங்கன் விமானத்திலா வந்தார்கள்? என அமைச்சர் மனோ கணேசன் பாராளுமன்றத்தில் கேள்விஎழுப்பினார்.
வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு குழுநிலை விவாதத்திற்கு பதிலளித்து பேசியபோதே அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் இதனை கூறினார். கூறினார்.
விஜய இளவரசன், தனது நண்பர்களுடன் இலங்கைத் தீவின் மேற்கு கரையில் வந்து குடியேறியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர்கள் வெளியில் இருந்து வந்தார்கள் என்று மஹாவம்சம் சொல்லுகிறது. விஜயனின், குவேணியுடனான திருமணம் பற்றியும், பின்னர் பாண்டிய நாட்டு இளவரசியுடனான திருமணம் பற்றியும் மகாவம்சம் கூறுகிறது.
விஜயனின் வருகையை நினைவுகூர்ந்து இலங்கை அரசாங்க தபால் திணைக்களம் ஒரு முத்திரையை வெளியிட்டது. அந்த முத்திரையின் பெறுமதி மூன்று சதம். அந்த முத்திரை, பத்து வருடங்களுக்கு பிறகு திடீரென வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஒருபுறம் மகாவம்சத்தை புகழ்கிறீர்கள். மறுபுறத்தில் அதையே மறுக்கிறீர்கள்.

நாங்கள் மட்டுமே இங்கே ஆதிமுதல் இருந்தோம். நீங்கள் எல்லோரும் வெளியில் இருந்து வந்தீர்கள் என தமிழ், முஸ்லிம் இன மக்களை பார்த்து எடுத்ததுக்கெல்லாம், சிங்கள மக்களை சார்ந்த ஒரு சிறு பிரிவினர் கூறுகிறார்கள்.
குறிப்பாக பொதுபல சேனாவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் தமிழர்களை இந்தியாவுக்கு போக சொல்கிறார். மட்டக்களப்பில் ஒரு தேரரும், இங்கே கொழும்பு மாவட்ட இரத்மலானையில் ஒரு தேரரும் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி, தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.
இது அடிப்படைவாத சிந்தனையாகும். தமிழரை இந்தியாவுக்கும், முஸ்லிம்களை அராபியாவுக்கும் போக சொல்லுகிறார்கள். இது இந்நாட்டிலே தேசிய சகவாழ்வுக்கு தடையாக இருக்கும் பிரதானமான ஒருபக்க காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் ஓட மாட்டோம். போக மாட்டோம். இது எங்கள் நாடு.
நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினர் இடையே சகவாழ்வை உறுதி படுத்துவதும், இந்நாட்டின் மும்மொழி கொள்கையை அமுல் செய்வதும், ஜனாதிபதி அவர்களால் எனது அமைச்சுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் ஆகும்.
இந்நோக்கங்களை நிறைவேற்ற எனது அமைச்சில் இன்று, அரசகரும மொழிகள் திணைக்களம், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, தேசிய மொழிகள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், அரசு சார்பற்ற அமைப்புகளின் செயலகம் ஆகிய நிறுவனங்களையும், தேசிய சகவாழ்வு பிரிவு, மொழிக்கொள்கை தெளிவுப்படுத்தல் பிரிவு ஆகிய உள்ளக பிரிவுகளையும் கொண்டுள்ளது.
இந்த ஆறு நிறுவனங்களை கொண்ட பெரிய ஒரு அமைச்சு இது. இங்கே எனது அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல என கூறப்பட்டது. அது உண்மைதான் இதை நான் பகிரங்கமாக கூறியுள்ளேன். அது சரி வரும் என்ற உறுதி எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்ப்போம். சரி வராவிட்டால் நான் பிச்சை எடுத்தாவது என் கொள்கைகளை முன்னெடுப்பேன்.
தேசிய இனப்பிரச்சினை முழுமையாக மொழி பிரச்சினை அல்ல. அப்படி நான் சொல்ல வரவில்லை. அப்படி சொன்னால் அது பொய். தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையாக அதிகார பகிர்வு அவசியம். அந்த அதிகார பகிர்வு, 13ம் திருத்தமா, 13 ப்ளஸா, சமஷ்டியா, கொன்பெடரலா என்பவற்றை பேச்சுவார்த்தைகளின் போது பார்த்துக்கொள்வோம் எனவும் பல விடயங்கள் பற்றி பாராளுமன்றத்தில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.