"உண்மையான நீதியை எங்கு தேடலாம்?”


எமது சமூகத்தில் மிக உயர்ந்த நம்பிக்கையைப் பெற்றிருப்பது நீதிமன்றம். நீதி மன்றம் என்பது குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிக்கும் இடமாக மட்டுமே பொது மக்களின் புத்தியில் பதிந்துள்ளதே ஒழிய, நீதியை நிலைநிறுத்துகின்ற இடமாக பதியவில்லை. ஏனெனில் நீதி மன்றத்தின் நடைமுறைகள் அவ்வாறுதான் இருக்கின்றன.


நீதி சொல்கின்ற நீதவான் மேல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நீதி சொல்கின்றவரிடம் பயமும், மரியாதையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவே இந்நடைமுறைகள் உள்ளன.
இந்த நாட்டில் நீதி வழங்கும் பொறுப்பை ஏற்கும் நீதிபதிகளின் அதிகாரம், அதிகார வரம்பு, யாவற்றையும் விளக்குவதற்கு ஏராளமான சட்டங்கள் இயற்றப்பெற்று நீதிபதிகளிடமிருந்து தலையாய பொறுப்பை எதிர்பார்க்கிறது என்பதைவிட தலையாய பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறது என்பது கண்கூடு.

நீதி வழங்க வேண்டும் என்கின்ற கடப்பாட்டில் இருந்து நீதிபதிகள் ஒருபொழுதும் நழுவக்கூடாது. அவர்களின் பொறுப்பு மிகவும் புனிதமானது.
நீதிபதிகள் நேர்மையானவர்களாக, நியாயமானவர்களாக, இன, மத மற்றும் யாதொரு பேதத்திற்கும் மனத்தில் இடம் தராது நீதி வழங்கவேண்டும். இந்த உண்மையை, இந்தக் கடப்பாட்டை, இந்தப் பொறுப்பை மறந்து செயல்படுபவரின் நீதி வழங்குதல் சந்தேகத்திற்கு உட்பட்டதாகிவிடும். அதோடு, நீதியின் தன்மையை களங்கப்படுத்திவிடும்.

சொந்த காரணங்களுக்காக, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் சரி, அதாவது இனம், மதம், நிறம், சமுதாயத்தில் முக்கிய நிலையில் இருப்பவர்கள். அரசியல் அதிகாரம் கொண்டவர்களின் கட்டளைகளுக்கு அல்லது விருப்பங்களுக்கு கைகொடுக்கும் வகையில் நீதிவழங்கும் தரம் அமைந்தால் அது நீதி அல்ல. இறைவனின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவார்களானால் இறைவனும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அப்படி செயல்பட்டால் அது இறைவனுக்கு இழைத்தத் துரோகம் என்றுதான் சொல்லவேண்டும்.

இவர்கள் ஒரு உண்மையை அறிந்துகொள்வது நல்லது. இறைவனைத் திருப்திப்படுத்தும் பொருட்டு நீதியைப் புறக்கணித்தால் அது பொய்யான, மனித குலத்துக்கு எதிர்பானத் தீர்ப்பாகும். காரணம் ஒருவர் இறைவனைத் திருப்திப்படுத்த நினைப்பது அது சொந்த நலனுக்காக என்பதாகும்.
சொந்த நலனைக் கருதி நீதி வழங்குவது நியாயமாகாது. இறைபற்று, இனப்பற்று, மதப்பற்று, பொருளாதார மேம்பாடு யாவும் மனித நேயத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. மனித நேயத்தை உதறித்தள்ளும் நீதி, மனிதனை மதிக்காத நீதி நீதியுமல்ல. அவ்வாறு நீதி வழங்குபவர் நீதிபதி என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவர் எனலாம்.


நீதியில் பாரபட்சம் கூடாது. பந்த பாசத்திற்கு இடம் தரக்கூடாது. சட்டங்களை நடுநிலையோடு கடைப்பிடிப்பதே நீதி என்பதாக பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகிறது. “நீதி என்பது சட்டம், கடமை, உரிமை, பொறுப்பு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. வெறுமனே கடமையுணர்ச்சியால் அல்லது பொறுப்புணர்ச்சியால் சட்டதிட்டங்களை இயந்திரத்தனமாக கடைப்பிடிப்பதை குறிப்பதில்லை.

கண்டிராத நீதிபதி கேட்டிராத வக்கீலின் வரட்டுவாதத்தில் குருட்டு முடிவெடுப்பது தீர்ப்பு ஆகிவிடக்கூடாது. நாதியற்ற மனிதரை தேதியிட்டுக் கூப்பிட்டு நீதியற்ற தீர்ப்புகளால் பீதியிடுவது நீதிமன்றமல்ல. நீதிக்குப் பதில் கேட்கும் வாதிக்கு நீதியாய்ப் பதில் சொல்லவே நீதிபதி .
சட்டம் காத்திருப்பது நீதிக்காக என்றிருக்கும் போது பணத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் தலைசாய்க்கும் நீதி நீதியன்று. அறியாமை நிறைந்த காலத்தில் சாதிக்கொரு நீதி வழங்கியதை ஏற்க மறுக்கும் பகுத்தறிவுள்ள நாம் இன்று அறிவியல் வளர்ந்துள்ள நிலையில் தவறான நீதி வழங்கியதற்காக தனது ஆட்சியையும், உயிரையும் துறந்த மன்னனின் கதைகளையும், தாய்ப்பசுவின் கண்ணீரை துடைக்க தவறு செய்த தன் மகனையே தேரில் இடறி தண்டித்த அரசனின் "நீதி பரிபாலனத்தையும் படித்தும் அறிவிலிகளாக நீதி வழங்குவது அவமானம்.

நீதியில் நிலைக்கற்களாக செயற்படும் நீதிபதிகள் தமது தொழிற் தகமைக்கு ஏற்புடையவராக நேர்மை. வாய்மை ஒரு தலைப்பட்சம் சாயாத நடுவுநிலமை , உணர்ச்சிகளுக்கு அடிமையாகாத நிலை போன்ற உயரிய பண்புடன் விளங்க வேண்டும். ஒரு பக்கம் சார்ந்திருத்தல், தனிநபர் அக்கறைகளுக்கு தலைசாய்த்தல் மக்கள் விமர்சனத்திற்கும் தலைசாய்திடல் கூடாது.
நீதிபதிகள் சூழ்நிலைகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவது பெரிதல்ல தன்னுடைய சுயதிறனான நுண்மான் நுழைபுலம் கொண்டு செயற்படும் போது ஓர் இக்கட்டான சூழ்நிலையில் யார் உண்மையான குற்றவாளியென்ற முடிவுக்கு வருவது ஓர் எளிதாகும்.

இரு திறத்தார் விவாதங்களின் அடிப்படையில் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இயற்கை நீதியினை கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். வழக்குத்தரப்பினர், சட்டத்தரணிகள், இளம் சட்டத்தரணிகள், சாட்சிகள் , நீதிமன்ற உறுப்பினர்கள் , என்போரிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நீதித்துறை" சாமானிய மக்களும் சமமான நீதி பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது.

பல நேரங்களில் விதிகளுக்கு முரணாக நீதிமுறைமை கடமைத் தவறியனவாக தனிப்பட்ட நலன் அக்கரை கருதி பக்கச்சார்டன் ஒரே நிகழ்வு வழக்கில் வேறுபட்ட தீர்ப்புக்கள் வழங்கும் விதமாக நீதியின் நிலைகளன்களாக விளங்குபவர்கள் நீதிபதிகள் இருக்கும் தருணத்தில் நீதியின் மீது மக்கள் வைத்திருக்கின்ற பற்றுறுதி ,நம்பகத்தன்மை ,வேறறுந்து சின்னாபின்னமாவதுடன் இதன்காரணமாக மக்களுக்கு ஒளிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ வேண்டிய நீதிமன்றங்கள் திறம், தரம் குறைந்தனவாகவும், கறைபடிந்தனவாகவும் உள்ளன.

எனவேதான் நாம் கூறுகின்றோம் இறைவனுக்கு அடுத்த படியாக அரசனுக்கு ஈடாக தனது கடமையை பறைசாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு ஒவ்வொரு மட்டத்திலுமுள்ள நீதவான்களினதும் நீதிபதிகளினதும் தலையாய கடமையாகும். மேலே நீதிதேவதையின் நலன் கூறும் புகைப்படம் எதனை உணர்த்துகின்றதென்றால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் நீதிதேவதையின் தராசு சமநிலையிலே காணப்பட வேண்டும் என்பதையே உலகிற்கு காட்டி நிற்கின்றது.

த.சுபராஜினி
நீதியின் நலன் விரும்பி