ஜனாதிபதிபதியின் மட்டக்களப்பு வருகை தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

(பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்)

எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவின் வருகை தொடர்பான மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்ட செயலக அதிபர்களும், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், பல உயர் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நேற்று  (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்த உயர்மட்டக்கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை திறப்பு விழா தொடர்பாகவும், ஏறாவூர் போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றுவது தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.


ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள குறிப்பிட்ட பிரதேசங்களில் மிகத்துரிதமாக இடம்பெறவுள்ள மின்சார வசதி, திறக்கப்படவுள்ள வைத்தியசாலைகளின் சகல குறைபாடுகளையும், பாதுகாப்பு வசதி தொடர்பாகவும், வீதி அபிவிருத்தி மற்றும் குறித்த பிரதேசங்களின் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ள களுவாஞ்சிக்குடிக்கும் விஜயம் மேற்கொண்டனர்.

மேலும், ஏறாவூர் கல்வி வலயப் பணிப்பாளர் இக்கூட்டத்திற்கு சமூகம் கொடுக்காததை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் இது தொடர்பாக இடம்பெற்றவுள்ள அடுத்த கூட்டங்களில் அனைத்து உயர் அதிகாரிகளும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். அத்துடன் இன்று பேசப்பட்ட பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட்டு அது தொடர்பான அறிக்கைகளும் சமர்பிக்கபட வேண்டும். என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கூறினார்.