மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் முதன் முதலாக பாரம்பரிய தைப்பொங்கல் விழா-2017


(சிவம்)

மட்டக்களப்பு புளியந்தீவு நகரில் முதன் முதலாக இந்துப் பண்டிகைகளுள் ஒன்றான பாரம்பரிய தைப்பொங்கல் விழா-2017 மெதடிஸ்த மத்திய கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெறும்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பண்பாட்டு ஊர்வலம் ஞாயிறு காலை 8.00 மணிக்கு கோட்டைமுனை – வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கல்லூரி வளாகத்தை சென்றடையும்.

பண்பாட்டு ஊர்வலத்தில் பொங்கல் பொருட்களை சுமந்த மாட்டு வண்டில் பவனி, உழவர் நடனம், கோலாட்டம் மற்றும் இன்னியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டு இசை முழக்கம் இடம்பெறும்.

பாடசாலை வளாகத்தில் மாணவர்களின் நுண்ணறிவை வெளிப்படுத்தும் போட்டிகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் திறன்களை வெளிப்படுத்தும் போட்டிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், குடும்பத்தினருக்கான கருத்தாடல், கோலாட்டம், நாட்டார் பாடல்கள், வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சு, காவியம் பாடுதல். கவியரங்கம், மற்றும் கலாசார நடனம் என்பன நடைபெறும்.