மட்டு. கரவெட்டியில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா - சிறப்பு நிகழ்வு

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் 100ஆவது பிறந்தநாள் விழா கரவெட்டி எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, கரவெட்டி பலநோக்கு மண்டப வளாகத்தில் மிக சிறப்புடன் நடைபெற்றது.

எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத் தலைவர் வேலாப்போடி கெங்காதரம் தலைமையில் இவ் விழா இடம்பெற்றது.

இதன்போது எம்.ஜி.ராமச்சந்திரனின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்ததைத் தொடர்ந்து,  100ஆவது பிறந்தநாள் விழா பொறிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நற்பணி மன்றத்தினால், கரவெட்டி கிராமத்தைச் சேர்ந்த 50 முதியோர்களுக்கு போர்வைத் துணிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கடந்தவருடம் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டப்பட்டு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில், வருகைதந்த கலைஞர்களால் எம்.ஜி.ராமச்சந்திரனின் திரைப்படப் பாடல்கள் பாடப்பட்டதுடன் ஏனைய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் எம்.ஜி.ஆர் நற்பணி மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள்  மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.