மட்டக்களப்பில் 3 உயிர்களை காப்பாற்றிய விமானப்படை வீரரின் மனவேதனை ! உதவாமல் வேடிக்கை பார்த்த மக்கள்

மட்டக்களப்பு களப்பில் வீழ்ந்த முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்த 3 பேரை காப்பாற்றிய இளைஞர் ஒருவர் தொடர்பான செய்தி தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் மட்டக்களப்பு விமான படை முகாமில் சேவை புரிந்து வரும் தனுஸ்க என்ற வீரர் ஆகும்.


குறித்த நபர் அண்மையில் மட்டக்களப்பு நகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது களப்புக்கு அருகில் குறித்த விபத்தை கண்டுள்ள நிலையில், அந்த இடத்திற்கு ஓடி சென்றுள்ளார்.

அந்த இடத்தில் 15 அடி ஆழத்தில் முச்சக்கர வண்டி மூழ்கியுள்ள நிலையில் அதில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற எவரும் முன்வரவில்லை.

பின்னர் முச்சக்கர வண்டியில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்காக குறித்த விமானப் படை வீரர் தனது உடைகளை கலைந்து விட்டு களப்பில் பாய்ந்துள்ளார்.

நீர் சகதியாக இருந்த காரணத்தினால் எதனையும் அவதானிக்க முடியாத நிலையில், முச்சக்கர வண்டியை கண்டுள்ளார்.

பின்னர் அதில் இருந்த 3 வயது குழந்தையை முதலில் காப்பாற்றியுள்ளார்.

அந்த குழந்தையை கரைக்கு கொண்டு வந்த பின்னர் மேலும் ஒரு குழந்தையையும் கடும் முயற்சியில் காப்பாற்றியுள்ளார்.

பின்னர் வயதான பெண்ணொருவரின் உயிரையும் அவர் காப்பாற்றியுள்ளார்.

எனினும் இதன்போது அங்கு வேடிக்கை பார்த்த எவரும் உதவிக்கு வரவில்லை என அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தொடர்ந்து நீரில் நீந்தி மேலும் அந்த முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்த கர்ப்பிணி பெண்ணொருவரையும் காப்பாற்றியுள்ளார்.

தனது உயிரை பணயம் வைத்து கரைக்கு கொண்டு வந்த அந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவனைக்கு கொண்டு செல்லக்கூட எவரும் முன்வரவில்லை என குறித்த இளைஞர் ஆதங்கத்துடன் எமக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னரே தான் உள்ளாடையுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளதை அவர் அறிந்துள்ளார்.

பின்னர் அவருக்கு மருத்துவமனையின் பணியாளர்கள் துணி ஒன்றை வழங்கியுள்ளனர்.

எனினும் சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த குறித்த கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளமை பின்னரே குறித்த இளைஞர் அறிந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது ஒருவர் ஏனும் உதவி செய்திருந்தால் அந்த பெண்ணை காப்பாற்றியிருக்கலாம் என மனவேதனையுடன் எம்மிடம் அந்த விமானப்படை வீரர் தெரிவித்துள்ளார்