தமிழ் மக்களின் வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு அழிக்கப்படுகிறது-பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)


தமிழ் மக்களின் வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு அழிக்கப்படுகிறது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் கல்முனையில் தெரிவித்தார்.

பாண்டிருப்பு அகரம் சமூக அமைப்பின் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான எஸ்.துஜியன்ந்தனின் " விருந்து " பல்சுவை சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் இங்கு உரையாற்றுகையில்;


இன்று எமது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கல்முனை பிரதேசத்தின் வரலாறு திரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. கல்முனையை ஆண்ட மன்னன் ஒரு தமிழ் மன்னன். இவைகள் திரிவுபடுத்தப்பட்டு சொல்லப்படும் நிலைதான் இன்று காணப்படுகிறது. இன்று வெளியிடப்படும் இந்த சஞ்சிகையில் இந்த உண்மைகள் சொல்லப்பட வேண்டும். நமது மக்கள் மத்தியில் கல்வி விரிப்புணர்வு செய்யப்பட வேண்டும். அம்பாறை மாவட்டத்துக்கு மாத்திரமல்ல வடகிழக்கு மக்களுக்கும் பிரயோசனமான சஞ்சிகையாக இது வெளிவர வேண்டும்.

தமிழையும் தமிழர்களையும் பாதிக்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற செயற்பாட்டில் இன்று வேற்று இனத்தவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்கள் நாங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பாரதியார் சொன்னது போன்று நாங்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தமிழையும் தமிழ் பண்பாடுகளையும் கலை -கலாசாரங்களையும் சொல்ல வேண்டும். தமிழை நிலை நிறுத்த வேண்டும். தமிழை பாதுகாக்க வேண்டும் என்றார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, பிரதேச செயலாளர்  கே. லவநாதன், எழுத்தாளர் எஸ்.ஸ்ரீகந்தராஜா, கவிஞர் எம். சடாச்சரன் உட்பட பலர் இங்கு உரையாற்றினார்கள். எழுத்தாளர்கள், அரசியல் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.