எட்டு வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமலிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமனத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் .

கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக வழங்கப்படாமலிருக்கும் இஸ்லாம் பாடங்களைப் போதிக்கத் தேவையான மௌலவி ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மௌலவிமார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர் செவ்வாய்க்கிழமை (17.01.2017) கிழக்கு மாகாண முதலமைச்சரை ஏறாவூர் நகர சபைக் கேட்போர் கூடத்தில் சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்ததாக மௌலவியா எம்.எல். அல்மிஸ்ரியா பானு தெரிவித்தார்.


நியமனக் கோரிக்கையை முன்வைத்து முதலமைச்சரைச் சந்தித்த மௌலவிமார் இதுபற்றிக் கூறும்போதுளூ 1974ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டில்தான் முதற் தடவையாக மௌலவி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப பரீட்சை நடாத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட அப்பரீட்சையில்சுமார் 2851 பேர் தோற்றி சுமார் 704 பேர் சித்தியடைந்திருந்தனர்.
அதன் பிரகாரம் 424 வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்க விண்ணப்பம் கோரப்பட்டது.

ஆயினும், 148 பேருக்கே 2009ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்டது.
2008ஆம் ஆண்டில்; உள்ளபடி அதிலே இன்னமும்  மீதியாகவுள்ள 276 பேருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டியுள்ளது.
ஆயினும், எட்டு வருங்கள் கழிந்து விட்ட நிலையிலும் அந்த வெற்றிடங்கள் கூட இதுவரை நிரப்பப்படவில்லை.
இது ஒரு புறமிருக்க கடந்த எட்டு வருடங்களாக நாடாளாவிய ரீதியில் மௌலவி ஆசிரியர்களுக்கான இன்னும் பலநூறு வெற்றிடங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

மேலும், மௌலவி ஆசிரியர் பரீட்சை எழுதி சித்திடைந்துள்ளவர்கள் நியமன வயதெல்லையைக் கூட கடந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, இதுகுறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.'