ஆலையடிவேம்பில் வாழ்வாதார உதவியாக கோழிக்குஞ்சுகள் வழங்கிவைப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த, அகதிகளாக நாடு திரும்பிய மற்றும் மீளக்குடியேற்றப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை முன்னேற்றும் பொருட்டு வாழ்வாதார உதவிகளை வழங்கிவைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வாழ்வாதார உதவியாக வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) காலை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட, கோழி வளர்ப்பைத் தமது பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட 16 குடும்பங்களுக்குத் தலா 75 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கிவைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத் திட்டமிடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட கால்நடைகள் உற்பத்தி, சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.நதீர், கால்நடைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரி.சஃபியுல்லா ஆகியோருடன் அக்கரைப்பற்று பிரதேச கால்நடைகள் சுகாதார வைத்தியர் எம்.ஐ.ரிஃப்கான், உதவி பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா ஆகியோர் கலந்துகொண்டு தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்குத் திருகோணமலை, உப்புவெளி கால்நடைகள் உற்பத்தி, சுகாதாரத் திணைக்களப் பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்டிருந்த கோழிக்குஞ்சுகளைப் பகிர்ந்தளித்திருந்தனர்.

இதன்போது கோழிக்குஞ்சுகளைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களுக்கு அவற்றை வளர்ப்பதில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், நோய்களை அடையாளங்காணல், அவற்றுக்கு உரிய காலங்களில் வழங்கப்படவேண்டிய மருந்துகள், தடுப்பு மருந்தேற்றல், உணவு வழங்கலில் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் என்பன தொடர்பாக அம்பாறை மாவட்ட கால்நடைகள் உற்பத்தி, சுகாதாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச கால்நடைகள் சுகாதார வைத்தியர் ஆகியோர் தெளிவுபடுத்தியிருந்ததோடு, குறித்த வாழ்வாதார உதவித் திட்டத்தினூடாக மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டுவரும் உதவிகள் தொடர்பாகப் பிரதேச செயலாளர் அங்கு பேசியிருந்தார்.