ஓந்தாச்சிமடம் கிராமத் தலைவராக வாழைச்சேனை காகித ஆலையில் கடமைபுரிந்து ஓய்வு பெற்ற சோமசுந்தரம் சற்குணராஜா தெரிவு


(சிவம்)

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஓந்தாச்சிமடம் கிராமத்திற்கான தலைவராக வாழைச்சேனை காகித ஆலையில்  கடமைபுரிந்து ஓய்வு பெற்ற சோமசுந்தரம் சற்குணராஜா தெரிவு செய்யப்பட்டார்.

நல்லிணக்க அரசானது இனங்கள் மற்றும் சமூகங்களிடையே பரஸ்பரம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில்  செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கிராம மட்டங்களிலிருந்து அதற்கான தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதற்கமைவாக ஓந்தாச்சிமடம் கிராம சேவை உத்தியோகத்தர் சிவலிங்கம் லவகீதன் முன்னிலையில் ஆலயங்களின் நிர்வாகசபை உறுப்பினர்கள், சமூக நலன்சார் சங்கங்கள், மன்றங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமூக மேம்பாட்டு மையங்கள், கல்வி மற்றும் தொழில் துறைசார் அமைப்புக்களின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களின் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஓந்தாச்சிமடம் ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வரர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற போது இத்தெரிவு இடம்பெற்றது.

ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலயம் மற்றும் சமூக நலன்சார் அமைப்புகளின் தலைவராக பணிபுரிந்துள்ளதோடு கிராமத்திற்கு சேவை செய்ய வரும் அரச உத்தியோகத்தர்களிடம் மிகுந்த நல்லுறவைக் கொண்டிருந்தார்.

ஓந்தாச்சிமடத்தின் அயற்கிராமங்களான களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு, எருவில், மகிழூர், மகிழூர்முனை மற்றும் கோட்டைக்கல்லாறு ஆகிய அயற்கிராம மக்களோடு மிகவும் அன்பாகப் பழகும் ஆற்றல் கொண்ட இவர் ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தில் உப  அதிபராகக் கடமைபுரியும் திருமதி அருளம்மா சற்குணராஜாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.