எங்கள் வீதியால் வந்துபாருங்கள் விபரிதம் புரியும் - அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மீண்டுமொரு ஞாபகமூட்டல்

(படுவான் பாலகன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு பிரதான சந்தியில் இருந்து முனைக்காடு கிராமம் வரையான பிரதான வீதி அமைக்கப்பட்டு பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில் குறித்த வீதி உடைந்து குழிகளாக காணப்படுகின்றது. இதனால் போக்குவரத்து செய்யும் பயணிகள் பல்வேறான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், குறித்த வீதியை புனரமைத்து வழங்குமாறும் இப்பிரதேசத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தார்வீதியாக அமைக்கப்பட்ட குறித்த வீதியானது பல வருடங்களாக உடைந்து கிறவல் வீதியாக, பெரும் குழிகள் உள்ள வீதியாக தற்போது காட்சியளிக்கின்றது. தட்டையான பரப்பைவிட பள்ளங்களே அதிகளவில் காணப்படுகின்றன. இதனால் வீதியில் நீர் வடிந்தோடமால் தேங்கி நின்றுகொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி போன்ற இடங்களில் இருந்து வருகைதருகின்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேருந்துகள்  முனைக்காடு கிராமத்திற்கு குறித்த வீதியினாலேயே போக்குவரத்து செய்கின்றன. பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி, கன்ரர் வாகனங்கள் வீதியால் செல்லும் போது நடையில் வீதியினால் பயணிகள் பயணிக்க முடியாத நிலையும் இருக்கின்றது. அவ்வாறு நடையில் பயணிக்கும் போது சேறு உடைகளில் தெறிக்கின்ற நிலையும், வெயில் காலங்களில் புழுதி அதிகமாக எழுகின்ற துர்ப்பாக்கிய நிலையும் இருந்து கொண்டிருக்கின்றது. இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் பள்ளங்களில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளன. 

குறித்த பிரதான வீதியின் அருகிலே முதலைக்குடா மகா வித்தியாலயம், கனிஸ்ட வித்தியாலயம் போன்றன அமையப்பெற்றுள்ளது. இதனால் குறித்த வீதியினால் நடையிலே அதிகளவு மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதினால் சேற்று நீர் உடைகளில் தெறிக்கின்ற நிலையும் உள்ளது.

முனைக்காடு விவேகானந்த வித்தியாலயம், சாரதா வித்தியாலய ஆசிரியர்கள்  மற்றும் முனைக்காடு கிராமமக்கள், முதலைக்குடா கிராமமக்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், விவசாயிகள் எனப்பலரும் பிரயாணம் செய்யும் குறித்த வீதி செப்பனிடப்படாமல் மிகவும் மோசமானநிலையில் இருப்பது குறித்து அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு அறிவித்தும் இன்னும் திருத்தியமைக்கப்படாத நிலையிலேயே இருந்து கொண்டிருப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். எனவே மலர்ந்திருக்கின்ற புதுவருடத்திலாவது தமது வீதியினை வெகுவிரைவில் சீரமைத்து போக்குவரத்து செய்வதற்கேற்றநிலையை ஏற்படுத்தி வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.