புனித மிக்கேல் கல்லூரியில் மட்டக்களப்பு வலயத்துக்கான பேண்தகு பாடசாலை அபிவிருத்தித் திட்டம்

(வரதன் , )
ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் மட்டக்களப்பு வலயத்துக்கான நிகழ்வு புனித மிக்கேல் கல்லூரியில் அதிபர் வெஸ்லியோ வாஸ் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குத்தன்மை, சுற்றாலைப்பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.

வீடுகளிலும் சுற்றாடலிலும் டெங்குத் தடுப்பின மேற்கொள்ளுதல், நுளம்பு பெருக்கத்தினைக் கட்டுப்படுத்தல் பாதுகாப்பான வாழ்க்கை முறைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை சுற்றாடல் பாதுகாப்புப்பிரிவு பொலிசார் வழங்கினர்.

பாடசாலைகளில் போசாக்கு, சுகாதாரம், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இந்தப் பேண்தகு பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ்; சுகாதாரக்கழகம், சுற்றாடல் மேம்பாட்டுக் கழகம் ஆகியன பாடசாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் தொழில் வழிகாட்டல் ஆலோசகரும் புனித மிக்கேல் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளருமான ஏ.ஜெகநாதன், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.அபேசிங்க, ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள், சுற்றாடல் பாதுகாப்புப்பிரிவு பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.