சுகாதார போஷாக்கும் கல்வியும் கிழக்கு மாகாண அபிவிருத்தியின் இரு கண்களாகும்- கிழக்கு மாகாண முதலமைச்சர்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

கல்வி அபிவிருத்தியோடு இணைந்த சுகாதாரமும்  போஷாக்கும் கிழக்கு மாகாண அபிவிருத்தியின் இரு கண்களாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தேசிய உணவுற்பத்தி விழிப்புணர்வுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை 17.01.2017 ஏறாவூர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

ஏறாவூர் கமநல சேவை நிலைய ஏறாவூர் பிரிவின் 10 கிராம சேவையாளர் பகுதிகள் மற்றும் காயான்குடா விவசாயப் பிரதேசத்தின் 15 கிராம சேவையாளர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 250 இற்கும் மேற்பட்ட வீட்டுத் தோட்ட விவசாயிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்குபற்றினர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் பெண்கள் உள்ளூர்  வளங்களைப் பயன்படுத்தி தமது வீட்டுத் தோட்டத்தையும் இன்னபிற உற்பத்திகளையும் மேற்கொள்வதற்காக அரசு இப்பொழுது பல்வேறு வகையான ஊக்குவிப்புக்களை வழங்குகின்றது.


எமது மாகாண நிருவாகமும் இதற்கான வேலைத் திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
உள்ளுர் வளங்களை உச்சபட்சமாகப் பயன்படுத்தி இந்த மாகாணத்தை பொருளாதார வளம் மிக்க ஒரு மாகாணமாகவும் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு மாகாணமாகவும் மாற்றுவதற்கு நாம் முயன்று கொண்டிருக்கின்றோம்.

பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அடிமை வேலை செய்து பிழைப்பு நடத்துவதை அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருபவன் நான்.
நமது பிரதேசத்தில் இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை உரிய முறையில் பயன்படுத்தினால் உச்சப் பயனைப் பெறலாம்.

அந்த வகையில் வீட்டுத் தோட்ட விவசாயத்தின் மூலம் பொருளாதாரத்தை ஈட்டிக் கொள்வது ஒரு புறமிருக்க, நமக்குத் தேவையான காய்கறிகளையும் மரக்கறிகளையும், தானியங்களையும் நாமே உற்பத்தி செய்து கொள்வதால் போஷாக்கும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

உணவே மருந்தென்பது நம் முன்னோர்களின் உணவுப் பழக்க வழக்கமும் வாழ்க்கை வழிமுறையுமாக இருந்தது. அதனால் அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக வாழ்ந்தார்கள்.

ஆனால், நாம் இந்த அவசர யுகத்தில் நஞ்சூட்டப்பட்ட இரசாயனம் கலந்த உற்பத்திகளையே உண்கின்றோம். அதனால் ஆரோக்கியம் கெட்டுப் போயுள்ளோம்.

இதனையிட்டு வீட்டுப் பெண்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.
சுகாதார போஷாக்கு நிலைமைகளில் மேம்பட்ட ஒரு மாகாணமாக கிழக்கு மாகாணத்தை உருவாக்குவதற்குப் பெண்களும் உதவ வேண்டும்.' என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஏறாவூர் கமநல சேவை உத்தியோகத்தர் ஐ. பதூர்தீன், ஏறாவூர் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன், முதலமைச்சரின் இணைப்பாளர்களான செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ், ஏ. அப்துல் நாஸர் உள்ளிட்டோரும் இன்னும் பல அதிகாரிகளும் வீட்டுத் தோட்ட விவசாயிகளும் கலந்து கொண்டனர்.