புத்தகப்பை இக்காலத்தில் மாணவருக்கு பெரும் சுமை

நீண்ட விடுமுறையின் பின்னர் முதலாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பண்டிகை, கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த பிள்ளைகள் சுமார் ஒரு மாத கால ஓய்வின் பின்னர் மறுபடியும் பாடப் புத்தகங்கள், ஏனைய உபகரணங்கள் கொண்ட கனத்த பைகளை முதுகில் தொங்க விட்டவாறு பாடசாலைகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
தமது பிள்ளைகளுக்கு சரியான புத்தகப் பைகளைத் தெரிவு செய்வதில் பல பெற்றோருக்கு போதுமான அறிவு இல்லை. சரியான பைகளைத் தெரிவு செய்து அணியாததால் பல பிள்ளைகள் எத்தனையோ உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர். இது குறித்து பல விபரமான தகவல்களை எமக்கு வழங்கினார் சிறுவர் நல மருத்துவர் டொக்டர் கோபி கிட்ணசாமி. அவரது பேட்டி வருமாறு :-
கேள்வி : இன்று நாடு முழுவதும் பாடசாலை செல்லும் சிறுவர்கள் முதுகுத் தண்டு கழுத்து போன்ற பகுதிகளில் பல்வேறு உபாதைகளால் அவதிப்படுகிறார்கள். இவ்வாறு அவதிப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகமா?
பதில் : இது ஒரு மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் எத்தனை சிறுவர்கள் இவ்வாறான நிலைமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுவதற்கான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும், இவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு மேற்கூறிய உபாதைகளுக்கு சிறுவர்கள் ஆளாவது குறித்து மிக அரிதாகத்தான் நாம் கேள்விப்பட்டோம். ஏனென்றால், அப்போது மாணவர்கள் தமது வகுப்பறை வேலைகளுக்கு தேவையான புத்தகங்களை ஒரே சூட்கேஸில் எடுத்துச் செல்வார்கள். அப்போது புத்தகப் பைகள் இல்லாததால் மாணவர்கள் தமது முதுகில் அதிக சுமையைச் சுமக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

இன்று அப்பியாசப் புத்தகங்களும், பாடப் புத்தகங்களும் பெரிதாகவும் சுமை கூடியதாகவும் இருக்கின்றன. ஆசிரியர்களும் எல்லாப் புத்கங்களையும் நாளாந்தம் கொண்டுவருமாறு மாணவர்களுக்கு கூறுவதால் அவர்கள் முன்னும் பின்னுமாக பைகளில் புத்தகங்களைச் சுமக்க வேண்டியுள்ளது. இந்த அதிகரித்த சுமையானது பாரதூரமான முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
கேள்வி : இதனால் இளம் பிள்ளைகளுக்கு எந்த மாதிரியான உபாதைகள் ஏற்படும்?
பதில் : முதுகில் அதிக சுமையேற்றுவதால் பிரச்சினைகள் மட்டும் ஏற்படுவதில்லை. சரியாகப் பொருந்தாத பைகளால் காயங்களும் ஏற்படலாம். கழுத்து வலி, தசைப்பிடிப்பு, தலைவலி, முதுகின் கீழ்ப் பகுதியில் வலி என்பன அதன் அறிகுறிகளில் சிலவாகும். வலி ஏற்படும் போது உட்காருவதிலும் முதுகுத்தண்டு என்பன பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. சரியாக உட்காராததால் முதுகுத்தண்டு கீழ்நோக்கி வளைவது நடமாட்டத்தில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.
கேள்வி : சுகாதாரக் கேடான இந்த புத்தகப் பைகளால் ஏற்படும் உபாதைகளைத் தடுக்க பெற்றோரும், சிறுவர்களும் என்ன செய்யலாம்?
பதில் : ஒரு பிள்ளை சுமக்கக்கூடிய குறிப்பிட்ட அளவு சுமை இருக்கிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும். பிள்ளைகள் தமது உடல் எடையிலும் 15 முதல் 20 சதவீதத்துக்கு அதிகமான பாடப் புத்தகங்கள் கொண்ட புத்தகப் பையை சுமக்கக் கூடாது எனக் கூறப்படுகின்றது. இதன் அர்த்தம் ஒரு பிள்ளையின் உடல் எடை 40 கிலோ என்றால் அந்தப் பிள்ளை 6 முதல் 8 கிலோ கிராம்களுக்கும் அதிகமான புத்தகப் பையை சுமக்கக் கூடாது.
கேள்வி :
உங்களுடைய கருத்தின்படி ஒரு பிள்ளைக்குரிய சரியான புத்தகப்பை எது? இது குறித்து நீங்கள் பெற்றோருக்கு என்ன கூறுவீர்கள்?
பதில் : 1. ‘பேட்’ வைக்கப்பட்ட பை முதுகில் நேரடியான அழுத்தம் ஏற்படுவதைக் குறைக்கும்.
2. கைகளை சுதந்திரமாக அசைப்பதை தடை செய்யாத ‘பேட்’ வைக்கப்பட்ட பரந்த தோள்பட்டை வார்களால் (straps) மரத்துப் போதல், மயிர்க்கூச்செறிதல் போன்ற தசை மாற்றங்கள் நிகழும்.
3. முதுகு மற்றும் தோள்பட்டையிலுள்ள சுமையை இடுப்பு தண்டுப் பக்கமாக மாற்றுவதற்கு பையின் மார்பு பகுதியில் ‘பெல்ட்’களை அமைத்தல்.
4. புத்தகப்பையிலுள்ள சுமையை உடலின் எல்லா பாகங்களும் நன்றாக பகிர்ந்து கொள்ளும் வகையில் திறப்புகளை அமைத்தல்.
5. இரவில் தெளிவாக பிரதிபலிக்கக் கூடியவாறு உறையைக் கொண்டதாக பை காணப்பட வேண்டும்.
6. நிறை குறைந்ததாக இருத்தல்
7. சரியான அளவு : பையைத் தெரிவு செய்யும் போது மேற்கூறிய விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று பல்வேறு அளவுகளில், பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பைகள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே, பையைத் தெரிவு செய்வதில் கவனம் தேவை.
கேள்வி : பெரும்பாலான சிறுவர்கள் பையில் பாரமான பொருட்களுடன் (பாடப்புத்தகங்கள் உட்பட) தண்ணீர்ப் போத்தல், பகலுணவுப் பெட்டி, உபகரணங்கள் என்பவற்றையும் எடுத்துச் செல்கின்றனர்.
கேள்வி : முதுகில் அதிக சுமையேற்றாதபடி இந்தப் பொருட்களை எவ்வாறு பையில் வைக்க வேண்டும்?

பதில் :
1. மிகப் பாரமான பொருட்களை முதுகுக்கு மிக அருகில் வைக்கவும்
2. புத்தகங்களையும், பொருட்களையும் பாதுகாப்பாக வைக்கவும்.
3. பாடசாலை தினத்தன்று மட்டும் தேவையான புத்தகங்கள், பொருட்களைக் கொண்டு செல்லவும்.
4. பை மிகவும் பாரமாக இருந்தால் சில்லுகள் பொருத்தப்பட்ட ஒரு இழுவைப் பையைப் பயன்படுத்துவது பற்றி சிந்தியுங்கள்.
கேள்வி : புத்தகப்பையை சரியான விதத்தில் சுமந்து செல்வது பற்றி மேலும் என்ன கூறுவீர்கள்?
பதில் : உங்களுடைய பிள்ளைக்கு உட்காருவதில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதைத் தடுக்க கீழ்வரும் அறிவுரைகள் முக்கியம்.
இருபக்க வார்களையும் அணிய வேண்டும். சில பிள்ளைகள் ஒரு பக்க வாரை மட்டுமே அணிவதால் பெற்றோர் தமது பிள்ளைகள் இருபக்க வார்களையும் அணியும்படி வற்புறுத்த வேண்டும். இதன் மூலம் பையின் சுமை சுற்றுவட்டப் பாதையில் நன்கு பிரிந்து செல்கின்றது. அத்துடன் ஒழுங்கான முறையில் அமர்ந்திருக்கவும் இது உதவுகின்றது. ஒரு பக்க வாரை மட்டும் அணிவதால் சுமை முழுவதும் ஒரு தோற்பட்டையிலும் உடம்பின் ஒரு பகுதியிலும் மட்டுமே அழுத்துகிறது.
வார்களை இறுக்குதல். பிள்ளையின் முதுகில் பை நெருக்கமாக இருக்கும் விதமாக தோள்பட்டை வார்களை சரிசெய்யும் அதேவேளை அதை இலகுவாக அணியவும், கழற்றவும் ஏற்றவாறு விட வேண்டும். முதுகில் தொங்கும் பை பிள்ளையை பின்னோக்கி இழுத்து தசைப்பிடிப்பு ஏற்படச் செய்யும். முதுகுப் பையை கவனமாக அணிந்து கழற்றவும். பிள்ளையின் உடம்பின் பின்பக்கத்தை பாதுகாப்பாக பேணி அளவுக்கதிகமாக திருகுவதை தவிர்க்கவும்.
முதுகுப் பையை மிகவும் உறுதியான தசைகள் உள்ள பின்பக்க மத்திய பகுதியில் அணியவும். பை சரியான நிலையில் இருக்கிறதா என அவதானியுங்கள். அது இடுப்புக்கு கீழே தொங்குவதாக இருந்தால் பிள்ளையை பின்னோக்கித் தள்ளி கூன் விழச் செய்யும்.
முதுகை வளைக்காமல் இரண்டு கால்களையும், கைகளையும் பயன்படுத்தி முதலில் ஒரு வாரையும் பிறகு அடுத்த வாரையும் பிடித்து முறையாக பையைத் தூக்கவும்.