வெட்டுப்புள்ளிகளை குறைத்து பட்டதாரிகளை ஆசிரியர்சேவைக்கு உள்வாங்க வேண்டும்.

(படுவான் பாலகன்)கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட பட்டதாரிகளை  ஆசிரியர்களாக உள்ளீர்ப்பதற்கான பரீட்சையில் கோரப்பட்ட வெற்றிடங்களுக்கு குறைவானவர்களே சித்தியடைந்துள்ளமையினால், பட்டதாரிகளின் வெட்டுப்புள்ளிகளை குறைத்து ஆசிரிய நியமனம் வழங்க கோரி கிழக்கு மாகாணசபையில் பிரேரணையொன்றினை முன்மொழிய இருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இன்று(23) திங்கட்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனை குறிப்பிட்டார்.


கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் 1150க்கு மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிழக்கு மாகாண பொதுசேவை  ஆணைக்குழுவினால் உளச்சார்பு, பொதுஅறிவு ஆகிய இரு பாடங்களில் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டது. அதற்கமைய, 16.01.2017அன்று வெளியிடப்பட்ட அப்பரீட்சை பெறுபேற்றின்படி ஒவ்வொரு பாடங்களிலும், 40புள்ளிகளுக்கு மேல் பெற்ற 305ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வுக்கு இதன்மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.   இப்பரீட்சைக்காக கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 5700பட்டதாரிகள் தோற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். 

ஏனைய மாகாணங்களில் வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட்டு பாடசாலைகளுக்குரிய ஆசிரியர்களுக்கான நேர்முகப்பரீட்சைகள் மீண்டும் நடாத்தாப்பட்டு ஆசிரியர்களை உள்வாங்கி வரும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றன. எனவே 01.08.2016ம் தேர்வின்படி வெட்டுப்புள்ளிகளை 30 அல்லது 35ஆக குறைத்து தேவையான ஆசிரியர்களை இப்பெறுபேற்றின் அடிப்படையில் உள்ளீர்ந்து நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவசர பிரேரணையொன்றினை கிழக்கு மாகாணசபைக்கு முன்மொழிந்துள்ளதாகவும், இப்பிரேரணை நாளை(24) நடைபெறும் மாகாணசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு சபையில் முன்வைக்க இருப்பதாகவும் மேலும் கூறினார்.