கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாம், இறுதி வருட  மாணவர்களைத் தவிர, ஏனைய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் ஏ.ஈ.கருணாகரன் தெரிவித்தார். 


இது தொடர்பான அறிவித்தல்  புதன்கிழமை (18) மாலை  மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது இவ்வாறிருக்க முதலாம், இறுதி வருட மாணவர்களைத் தவிர, ஏனைய அனைத்துப்பீட மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதுடன், அம்மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவது தொடர்பில்; பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


 மாணவர்களுக்கான விடுதி வழங்கல் தொடர்பான  பிரச்சினை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.   கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விடுதி வசதி கோரி இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அன்றையதினம் முதல் பல்கலைக்கழகப் பேரவைக் கட்டடத்தில்  அம்மாணவர்கள் நான்காவது நாளாகவும் நேற்று (19) தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.