5வது நாளாக தொடரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாகிரக போராட்டம்

(படுவான் பாலகன் ) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் காலவரையறையற்ற சத்தியாகிரகப் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் சனிக்கிழமை(25) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பு முன்னெடுக்கப்படுகின்றன. 


வேலையற்றிருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் உடன் அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் நியமனங்கள் வழங்கும் பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறும் ஆண்டு மூர்ப்பு அடிப்படையில் நியமனம் வழங்க வேண்டும், 40 – 45வயதிற்குட்டப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பட்டதாரிகள் நியமனத்தின் போது பரீட்சைகள் நடாத்தப்படக்கூடாது. போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

1500க்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் பங்கேற்றிருப்பதுடன், போரட்டம் நடைபெறும் இடத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் நிலையிலும் தமக்கான தீர்வு கிடைக்கும் குறித்த போராட்டத்தினை நிறைவு செய்யப்போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகள் குறிப்பிட்டனர்.

இரவு, பகலாக முன்னெடுக்கப்படும், குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்ககோரியும், தமது நிலைகுறித்தும் அச்சிடப்பட்ட பிரசுரங்களும் பகிரப்படுகின்றன. மேலும் நகரின் பல பகுதிகளிலும் பதாதைகளும் ஒட்டப்பட்டுள்ளன.