கல்வித் துறையின் முன்னேற்றத்துக்கு முகாமைத்துவம் அவசியமானது பட்டிருப்பு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம்

(இ.சுதாகரன்)


கல்வித் துறைசார் நிருவாகக் கட்டமைப்பு இமுகாமைத்துவச் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்ற போது அந் நிறுவனத்தின் வெளியீடுகள் சிறப்பானதாக அமையும்.பாடசாலைகளில் பரிசளிப்பு விழா நடாத்துவதன் மூலமாக மாணவர்களிடையே போட்டி மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வது மாத்திரமல்லாது மாணவரிடையே மறைந்து இருக்கும் திறன்களையும் கல்விச் சமூகத்தினால் மதிப்பீடு செய்ய முடியும்.

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று இப் பாடசாலையில் நடைபெற்ற ;பரிசளிப்பு விழா நிகழ்வின் நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பினை நோக்குகின்ற போது முகாமைத்துவத்தின் உயர்ந்த நியதியினை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

உதயபுரம் தமிழ் வித்தியாலயம் மிக அண்மைக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இப் பாடசாலையின் துரிதமான வளர்ச்சியானது பாராட்டத்தக்கது.புலமைப் பரிசில் பரீட்சையில் மாத்திரமல்லாது க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் இப் பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளும் பெறுபேறுகள் ஏனைய பாடசாலைகளுடன் போட்டி போடக் கூடியளவு உயர் நிலையில் உள்ளமை வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் எனக்கு மாத்திமல்லாது இக்கிராமத்திற்கும் மெருமை தரக் கூடிய விடயமாகும்.


சமூகம் பாடசாலையிலிருந்து எதிர் பார்க்கும் வெளியீடு சிறப்பானதாக அமையுமாயின் அப் பாடசாலையின் முகாமைத்துவம் தங்கு தடையின்றி முறையான நடைபெறுகின்றது என்பதனை உறுதிசெய்து கொள்ள  முடியும்.கல்வி கலைத்திட்டத்தினைப் பொறுத்தமட்டில் இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் மிக அவசியமானது. அந்த வகையில் இப் பாடசாலை சமூகத்தினால் முன்னெடுக்கப் படுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் பாராட்டத்தக்கது.எனக் குறிப்பிட்டார்.