தந்தை செல்வா ஒத்துழைத்திருந்தால் பிரபாகரன் உருவாகியிருக்க மாட்டார்! – ஜனாதிபதி

நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கென முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்க கொண்டுவந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான தந்தை செல்வா என்றழைக்கப்படும் செல்வநாயகம் உதவியிருந்தால் பிரபாகரன் என்ற ஒருவர் உருவாகியிருக்க மாட்டாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


முன்னாள் அரச சட்டத்தரணியும் செனட் சபையின் முன்னாள் உறுப்பினருமான எச்.ஸ்ரீ.நிஸ்ஸங்கவின் 63ஆவது நினைவு தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்குறித்தவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”பொது சொத்துக்களையும் அரச வளங்களையும் தவறாக பயன்படுத்தி, பணத்தின் பின்னால் சென்று தமது சுயலாபங்களை மட்டும் சிந்திக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில், நிஸ்ஸங்க போன்ற நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை மீண்டும் மீண்டும் ஆய்வு செய்யவேண்டிய காலம் வந்துள்ளது. நிஸ்ஸங்க தொடர்பில் இந்நாட்டு பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

ஒவ்வொரு யுகத்திற்கும் உரியவர்கள் பேசப்பட்டாலும், சுதந்திர போராட்டத்துக்கு உயிரூட்டிய தலைவர்கள் மற்றும் அக்காலத்தில் தாய்நாட்டுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பில் தற்போதைய தலைமுறையினரை தெளிவுபடுத்த வேண்டும்.

இந்த நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அன்று எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க பாரிய சேவையாற்றினார். அதேபோன்று, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டுவந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த டட்லி சேனாநாயக்கவுக்கு செல்வநாயகம் ஒத்துழைப்பு வழங்கியிருந்தால், நாம் அறிந்த வகையில் பிரபாகரன் என்ற ஒருவர் உருவாகியிருக்க மாட்டார்” என்றார்.