களுதாவளை துப்பாக்கிச்சூடு : 30 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, களுதாவளையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 30 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி ஐ.பி. அபூபக்கர், நேற்று (26) தெரிவித்தார்.



 ஏறாவூர் முதல் கல்முனை வரையான பகுதிகளில் பிரதான வீதிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள், ஏனைய வியாபார நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராக்களில் அன்றைய தினம் பதியப்பட்டுள்ள காட்சிகளின் அடிப்படையிலும் வேறு வழிகளிலும் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 விசேட பொலிஸ் பிரிவினருடன் இணைந்து களுவாஞ்சிக்குடிப் பொலிஸாரும் இவ்விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவை தவிர, காத்தான்குடி ஏறாவூர் வெல்லாவெளி கொக்கடிச்சோலை பொலிஸாரும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த என்.விமல்ராஜ், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

 வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு கடந்த புதன்கிழமை (22) இரவு 7 மணியளவில் அலைபேசியில் உரையாடிகொண்டிருந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இனந்தெரியாத நபர்கள் இருவர், அவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.