நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் அட்டகாசம்



 (தாஸன்)

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட  மத்திய முகாம்,இலுப்பைக்குளம் போன்ற இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக  பிரதேச வாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மிக அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் காட்டுயானைகளின் தாக்குதல்களும் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளதுடன் தினமும் தமது கிராமங்களுக்குள் புகுந்து வீடுகள்,சேனைப்பயிர் செய்கைகள், தோட்டங்கள், நெற்செய்கைகள் மற்றும் பயன் தரு மரங்களை அழித்து வருவதுடன் தமது அன்றாட ஜீவனோபாயத்தில் பாரிய இடர்ப்பாடுகளையும் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இலுப்பைக்குளம் பிரதேசத்தில் நேற்று அதிகாலை 2.00 மணி நேர வேளையில், கனகரெத்தினம் என்பவரது வளவுக்குள் புகுந்து பட்டறையில் வைக்கப்பட்டிருந்த மூன்று நெல் மூடைகளையும் அருகிலுள்ள மரவெள்ளி தோட்டத்தினையும் மிகுந்த சேதத்துக்கு உட்ப்படுத்தியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.


நன்கு பழக்கப்பட்ட நான்கு யானைகளே இவ்வாறு தமது பகுதிக்குள் உட்புகுந்து தங்களது வாழ்வாதாரத்தை அழிப்பதாக பிரதேச வாழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த கால பகுதிக்குள் 15 பேர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கியுள்ளதுடன் 20 மேற்பட்ட வீடுகளும் சேதமாக்கப்பட்டுள்ளன என தெரிய வருகிறது.

தங்களையும் தங்களது உடமை மற்றும் வளங்களையும் காட்டு யானைகளில் தொல்லைகளிலிருந்து, விடுவித்து தருமாறு மக்கள் பிரதிநிதிகளிடமும்,அரச அதிபரிடமும் பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.