கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் மூடப்பட்டது. பரீட்சைகளும் ஒத்தி வைப்பு


 ( -ஏ.எச்.ஏ. ஹுஸைன்  )

வகுப்புத் தடை மாணவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திங்கட்கிழமை முதற்கொண்டு காலவரையின்றி மூடும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதனால் திங்கள் முதல் நடைபெறவிருந்த பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக் கழக நிருவாகம் தெரிவித்தது.

மேலும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 28ஆம் திகதி திருகோணமலை வளாகத்தில் கடமைபுரியும் விரிவுரையாளர்pகள், நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரை மாலை 4 மணியிருந்து இரவு 10 மணிவரை சில மாணவர்கள் தடுத்து வைத்து அவஸ்தைக்குள்ளாக்கினர் என்ற காரணத்தினால் 16 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.

அவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள தமது சக மாணவர்களையும் பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி அவ்வளாக மாணவர்கள் திங்கட்கிழமை 20.03.2017 எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இக்குழப்ப நிலைமையின்போது காவலாளி ஒருவரும் மாணவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.


இந்த வளாகத்தில் திங்கட்கிழமை முதல் நடைபெறவிருந்த பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்கள் சிலருக்கும் குழப்பம் விளைவித்த மாணவர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிருவாகம் தெரிவித்தது.