தரிசு நிலங்களும் பாழ்கிணறுகளும் டெங்கு உற்பத்தியாகும் ஊட்டல் இடங்களாகும்

 ( -ஏ.எச்.ஏ. ஹுஸைன்  )

“தரிசு நிலங்களும் பாழ்கிணறுகளும் டெங்கு உற்பத்தியாகும் ஊட்டல் இடங்களாக இருப்பதால், இவற்றை உடனடியாக அகற்ற அல்லது பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

டெங்கு நுளம்பை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல், ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பூங்காவில் நேற்று இரவு இடம்பெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “ஆகக் கூடுதலாக டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக பாழடைந்த கிணறுகள்தான் காணப்படுகின்றன. வெளித்திறந்த நிலையில் பாவிக்கப்படாமல் சாக்கடைகள் நிறைந்து காணப்படும் கிணறுகள்தான் அபாயத்துக்கு உரிய இடங்களாகும். ஏறாவூர் மிச்நகர்ப் பகுதியில் மகப்பேறு இடம்பெற்ற 40 நாட்கள் கழிந்த தாய் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டு வளவில், தேவைக்கு அதிகமாக 3 கிணறுகள், ஒரு குழாய்க் கிணறு, அதற்கும் மேலதிகமாக குழாய் நீர் விநியோகமும் காணப்படுகின்றன.

அந்தக் கிணறுகளிலும் குழாய்க் கிணற்றிலும் டெங்கு குடம்பிகள் உற்பத்தியாகியிருப்பதை நாம் பரிசோதனைகள் மூலம் அறிந்து கொண்டோம். வெற்றுக் காணிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் பாழடைந்த கிணறுகள் அபாயகரமானதாக அமைந்துள்ளது என்பதையும் இது டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதான இடங்கள் என்பதையும் பொதுமக்கள் உணர்ந்து அவற்றை தடுப்பதற்கு முன்வர வேண்டும்.

ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  மிச்நகர், மீராகேணி உள்ளிட்ட கிராமங்களில் காணப்படும் பராமரிக்கப்படாத வெற்றுக் காணிகள், பாழடைந்த கிணறுகள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதற்குத் தோதாக அமைந்துள்ளன. அங்கு காணப்படும் 120 பாழடைந்த கிணறுகளும் 118 மேலதிக கிணறுகளும் 666 குழாய்க் கிணறுகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். இதேவேளை, 1830 கிணறுகளுக்கு மூடி இட வேண்டிய தேவையுள்ளது” என்றார்.