லண்டனில் உள்ள பிரிட்டன் பாராளுமன்ற அருகே தாக்குதல்; பலி எண்ணிக்கை 5

பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 5 பேர் பலியாக, 40 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலண்டனில் உள்ள பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மர்ம நபர் ஒருவர் மக்கள் கூட்டத்தினுள் காரைச் செலுத்தியதோடு பொலிஸ் அதிகாரி ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தாக்குதல் நடத்திய நபர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.


தீவிரவாதி தனியாகவே வந்ததாகவும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் மக்கள் கூட்டத்திடையே காரைச் செலுத்தி பயணிகள் பலர் மீது ஏற்றியுள்ளார்.

பின்னர், வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கின் நுழைவாயிலுக்குள் காருடன் புகுந்த நபர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

48 வயதான பி.சி.கெய்த் பால்மர் எனும் குறித்த பொலிஸ் அதிகாரி, கடந்த 15 வருடங்களாக அந்நாட்டு பொலிஸ் திணைக்களத்தில் புரிந்த ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் தெரசா மே, அவசரக்கூட்டமொன்றை கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளார்,

இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது எனத் தெரிவித்துள்ள அவர், பாராளுமன்ற மதிப்பீடுகளை குலைக்கும் இவ்வாறான முயற்சிகள் தோற்கடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஜூலை 7 இற்கும் பின்னர், , பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு தீவிரவாதத் தாக்குதலாக இத்தாக்குதல் கருதப்படுகின்றது.