அரசியலாளர்களின் கொள்கைகளின் அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட மக்களாக வடகிழக்கு தமிழ் மக்கள் இருக்கின்றோம் : துரைராசசிங்கம்

இந்த நாட்டின் அரசியலாளர்களின் கொள்கைகளின் அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட மக்களாக வடக்கு கிழக்கு மாகாண மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம். நாட்டினுடைய நிர்வாம், பொளாதாரம், வளங்கள் எல்லாம் சரியான முறையில் சென்றடையவில்லை என்கின்ற குறைபாட்டோடு எமது நாடு இருக்கின்றது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண விளையாட்டு வீரர்களுக்கான பதக்கம் வழங்குகின்ற நிகழ்வில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தான் குறைவான பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்கின்ற செய்தி அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றவன் என்கின்ற வகையில் அது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற செய்தி அல்ல. ஆனால் அதற்கு பல பின்புலங்கள் காரணமாக இருக்கலாம் அவ்வாறான புலங்களை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் சீர் செய்திட வேண்டும். ஏனெனில் எமது மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல.
எமக்கு பொதுவானதொரு சிறந்த விளையாட்டு மைதானம் இல்லை. வெபர் விளையாட்டு மைதானம் கூட அண்மையில் தான் புனரமைக்கப்பட்டது. இருந்த போதிலும் இவ்வாறு களங்கள் இல்லாத போதிலும் எமது மாட்ட வீரர்கள் அவர்களைத் தயார் படுத்திக் கொண்டு இந்நிலைக்கு வந்திருக்கின்றார்கள் என்பது மிகவும் பெருமிதம் கொள்ள வேண்டிய விடயம்.
மாவட்ட மட்டத்தில் நாம் பெற்றுக் கொள்ளுகின்ற பதக்கங்கள் எல்லாம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுகின்ற விடயம் போலவே இருக்கின்றது. ஆனால் தேசிய மட்டத்தில் நாம் எங்கே இருக்கின்றோம் என்பதைப் பார்க்கின்ற போது இன்னும் அதிக வேதனை எமக்கு வருகின்றது. தேசிய மட்டத்தில் நாம் மிகவும் பின்தள்ளப்பட்டவர்களாக இருக்கின்றோம்.  எமது மாகாண விளையாட்டு அமைச்சிற்கு வழங்கப்பட்டிருக்கின்ற நிதி அதன் வெட்டுக்கள் என்பவற்றில் எல்லாம் மிகவும் குறைந்த மட்டத்திலே இருக்கின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொருத்தவரையில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச் சொல்லுகின்றதும், மயிலைப் பிடித்து காலை உடைத்து ஆடச் சொல்லுகின்றதும் போன்ற நிலைமைகளே காணப்படுகின்றன. இந்த நாட்டினுடைய மற்றைய ஏழு மாகாணங்களும் சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் வளர்ந்து கொண்டிருக்கின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் அரசியலாளர்களின் கொள்கைகளின் அடிப்படையில் வஞ்சிக்கப்பட்ட மக்களாக வடக்கு கிழக்கு மாகாண மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம். அதே நேரத்தில் மாவட்டங்களுக்குள்ளேயும் நலிவுற்று பொலிவுற்று இருக்கின்ற வலயங்கள் என வேறுபாடுகளை காண முடியும்.
எனவே நாட்டினுடைய நிர்வாம், பொளாதாரம், வளங்கள் எல்லாம் சரியான முறையில் சென்றடையவில்லை என்கின்ற குறைபாட்டோடு எமது நாடு இருக்கின்றது.
வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு மக்களைச் தன் சொத்துக்களாக மதிக்கின்றார்கள். ஆனால் நம்முடைய நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. இனம் மொழி மதம் என்கின்ற பேய்களை நாங்களே வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பேய்களுக்கு அடிபணிந்து கொண்டு நாங்களும் உலக நாடுகளுக்கு முன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று சொல்வதற்கு எந்தத் தகுதியும் எமக்கு கிடையாது.
எனவே 2015ம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டுள்ள மாற்றமாவது இந்த நாட்டை ஒரே கண்ணில் பார்க்கக் கூடியதாக, வளங்களை எல்லா இடங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக, நாங்கள் விட்டகுறை தொட்டகுறையாக முப்பது வருடங்கள் பின்தள்ளப்பட்டிருக்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியதாக அரசு தலைவர்கள் அரச நிறுவக தலைவர்கள் ஆகியோர் செயற்படும் வகையில் இருந்திட வேண்டும்.
மக்களின் குறைகளைக் கேட்டு அதனைத் தீர்க்க வேண்டிய கடமை அரசியலாளர்களுக்கு உண்டு. ஆனால் நிர்வாகிகள் என்பவர்கள் அரசியலாளர்கள் தீட்டுகின்ற திட்டங்களை எந்தளவிற்கு நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியும் எங்களுக்கு இருக்கின்றது. ஏனெனில் அரசுத் தலைவர் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயத்தில் அக்கறையுள்ளவராக இருக்கின்றார். ஆனால் இந்த விடயங்கள் எல்லாம் அதிகாரிகளுடாகவே செல்லுகின்றது. இந்த விடயத்தில் நிர்வாக அதிகாரிகள் அவர்களுடைய ஏகபோக நிர்வாக உரிமைகளை சரியாக இறுகப் பிடித்துக் கொள்கின்றார்கள். இதுவும் இந்த நாடு சரியான முறையில் வளர்ந்திடாததற்கு ஒரு காரணம் என்பது எங்களுடைய அபிப்பிராயம்.
இந்த விடயங்களை எல்லாம் கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டுக்கான செயற்பாடகளுக்குச் செல்லும் போது அதிகாரிகள் தங்களுடைய அதிகாரங்களை எவ்வாறு மத்தியில் இருந்து பெற்று எங்களுடைய மாவட்டங்களுக்கு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக தங்களது உத்திகள் அனைத்தையும் கையாள வேண்டும். அதற்கான தடைகள் வருகின்ற போது அதனை அரசியலாளர்கள் என்கின்ற ரீதியில் நாங்கள் எந்த எந்த வழிகளைக் கையாண்டு அதனைத் தீர்த்துத் தரலாம் என்று எங்களை வழிப்படுத்துகின்ற வகையில் அதிகாரிகளின் செயற்பாடுகள் இருக்கின்ற அதே நேரத்தில் உயரதிகாரிகளாக இருக்கின்ற ஆளுநர்கள் போன்றோர் எமது மனக் குறைகளை பிரதமர் ஜனாதிபதி ஆகியோருக்குச் சொல்ல வேண்டியதும் எமது உண்மையான யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளவதும் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு ஆரோக்கியமாக காலடி எடுத்து வைப்பதற்கான கருவியாக இருந்திடும் என்று தெரிவித்தார்.