நீல நிறமாக மாறுகிறது இலங்கை போலீசாரின் சீருடை

போலீசாரின் சீருடையில்   மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.

நீண்ட காலமாக ஒரே நிற போலீஸ் சீருடை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த போலிஸ் மா அதிபர், தற்போது அது மாற்றப்பட வேண்டிய காலம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் போலீசாரின் சீருடைகளுக்காக நீல நிறம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே, எமது போலீசாரின் சீருடைகளுக்காக கடும் நீல நிறத்தை அறிமுகப்படுத்த தீர்மானமொன்று இருப்பதாக கூறிய போலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர அதனை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த போலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர கடந்த ஆட்சிக் காலத்தின் போது தான் பாரிய பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்தாக தெரிவித்தார்.

ஆனால், தற்போது போலிஸ் சேவை மீது மேற்கொள்ளப்படும் அரசியல் தலையீடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், போலிஸ் அதிகாரிகளுக்கு சுதந்திரமாக தனது பணிகளை மேற் கொள்ளக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.