கிழக்கு மாகாண ஆளுநரிடம் ஹக்கீம் கடும் ஆட்சேபனை

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த ஆசிரமம் ஒன்றை அமைப்பதற்கு பலவந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 நல்லிணக்க செயற்பாடுகளுக்கான பல உறுதிப்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கு வழங்கியுள்ள அரசாங்கம், இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைமையையும் விரிசல்களையும் மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இடமளிப்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துமெனவும் அமைச்சர் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.


மேலும், பிரஸ்தாப காணியின் முஸ்லிம் உரிமையாளரிடம் அதற்கான உறுதிப்பத்திரம் உள்ள நிலையில், அதற்குப் பகரமாக அவருக்கு வேறிடத்தில் நிலம் தருவதாகக் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தெரிவித்திருப்பதையும், கடுமையான ஆட்சேபிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை முற்பகல் கிழக்கு மாகாண ஆளுநரிடம் இவற்றைத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின்னர் இது தொடர்பில் அவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாண ஆளுநரிடம் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:

சில மாதங்களுக்கு முன் இறக்காமத்தை அண்டிய மாணிக்கமடு பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலையொன்றை இனவாதிகள் சிலர் வைத்தததை தொடர்ந்து வழக்கொன்றைத் தாக்கல் செய்த பொலிஸார் பின்னர் வற்புறுத்தலின் பேரில் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களுக்கெதிரான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் பேரினவாத சக்திகள் பெரிதும் ஆர்வம் காட்டி வரும் இவ்வாறான சூழ்நிலையில் இது பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமிழ் தேசிக் கூட்டமைப்பினருடனும் கலந்தாலோசித்துள்ளார்.

கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்ட பகுதியில் பௌத்த ஆசிரமம் ஒன்றை நிறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் பிக்குகளும், இனவாதிகளும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கிழக்கு மாகாண சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருகின்றார்.

அங்கு சென்று பௌத்த ஆசிரமம் ஒன்றை அமைக்க முற்பட்டுள்ள பிக்குகள் அதை எதிர்க்கச் சென்ற பொதுமக்கள் மீது மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் ஹக்கீமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கிழக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்ட பிரதேசத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்களும், தடயங்களும் காணப்படுவதாக கூறியுள்ளார். அதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ஹக்கீம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் என்று கூறிக்கொண்டு அவ்வாறான இடங்களில் புதிதாக கட்டடங்களை நிறுவ முடியாதென்பதை ஆளுநரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண காணி ஆணையாளருக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் இது பற்றி தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அமைச்சர் ஹக்கீமிடம் கூறியுள்ளார்.

இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஜனாதிபதி அனுமதிக்கமாட்டார் என தாம் நம்புவதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.