பட்டிருப்பு விளையாட்டு விழாவில் அரசாங்க அதிபர் உட்பட ஐவருக்கு கௌரவம்

 ( ரவிப்ரியா )
பட்டிருப்பு வுளு டயமன் விளையாட்டுக் கழகம் 31வது ஆண்டு நிறைவு   விளையாட்டு விழாவை முன்னிட்டு, ஞாயிறு (23) நடாத்திய விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக மாவட்டத்தின் வளர்ச்சியிலும் சமூக மேம்பாட்டிலும்; முக்கிய பங்காற்றிவரும் ஐவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தது.

கழக தலைவர் கி.குகதாசன் தலைமையில் அதிதிகளை வரவேற்று மங்கல விளக்கேற்றி ஆரம்பமான விளையாட்டு விழாவில் இந்த கௌரவிப்பு நிகழ்வு முக்கிய இடத்தை வகித்தது.

பட்டிருப்பு தேசிய பாடசாலையின் அதிபராக இருந்து பிரதேச கல்வி வளர்ச்சியில் தடம் பதித்த ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொன்.வன்னியசிங்கம். ஓய்வு நிலை அதிபர் வே.கிருஸ்ணனால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

சட்டத்தரணியும். உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சங்க தலைவரும், சமூக சேவையாளருமான மு.கணேசராஜாவை பட்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியருமான கி.ரமேஸ் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

மட்டக்களப்பு நகர வர்த்தக சங்கத் தலைவரும், ஈஸ்லகூன் உரிமையாளரும், சமூக சேவையாளருமான தேசபந்து மு.செல்வராஜாவை பட்டிருப்பு கிராமத் தலைவர் கி.குணபாலன்பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தேசகீர்த்தி, சைவப்புரவலர். கிழக்கு மாகாண நிர்மாணிப்பு அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும், தொழிலதிபருமான வி.ரஞ்சிதமூர்த்தியை கழகத்தின் தலைவருடன் இணைந்து முன்னாள் கழகத் தலைவர் எஸ்.
 நிதியானந்தராஜாவும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை துரித கதியில் அபிவிருத்திப்பாதைக்கு இட்டுச் செல்வதை ஆதாரபூர்வமாக அறிவித்து, அனைத்தையும் பாராட்டுப் பத்திரத்தில் இரத்தினச் சுருக்கமாக உள்ளடக்கி வாசித்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கு மாலையிட்டு ஆரத் தழுவி ஓய்வு நிலை கணக்காளரும், காப்புறுதி ஆலோசகரும், சமாதான நீதவானுமான திருமதி பாக்கியம் இராசையா. மற்றும் டாக்டர் திருமதி செல்வராணி செங்கமலன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.