அற்ப அரசியல் நலனுக்கானதா பெற்றோலிய வேலைநிறுத்தம்?

நாடு தழுவிய தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை பெற்றோலிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்பித்தது. இவ்வேலைநிறுத்தம் தொடர்பான செய்தி வெளியானது முதல் நாளே எரிபொருள் நிரப்பும் நிலையங்களை ஈக்களைப் போன்று வாகனங்கள் மொய்த்திருந்தன.

அந்தளவுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் பல நூறு மீற்றர்கள் தூரத்திற்கு வரிசைகளில் காணப்பட்டன. ஒவ்வொரு வாகன தம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிக் கொள்வதில் காட்டிய ஆர்வத்தின் வெளிப்பாடே அது. இவ்வேலைநிறுத்தம் ஆரம்பமான பின்னரும் இதே நிலை தான் காணப்பட்டது.

அதேநேரம் சில வாகனங்கள் இவ்வேலை நிறுத்தத்தைக் காரணம் காட்டி பாதைக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டன. பல வாகனங்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தன. இத்தொழிற்சங்க நடவடிக்கையின் விளைவாக வாகன உரிமையாளர்கள் பலவித அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமை என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.

ஆனால் இந்நாட்டு மக்களில் பெரும்பகுதியினர் இத்தொழில் சங்க நடவடிக்கை என்ன நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படுகின்றது என்பதைப் பெரும் பகுதியினர் அறிந்திருக்கவில்லை.


ஆனால் இத்தொழில் சங்கக் கூட்டமைப்பு, 'அரசாங்கம் திருகோணமலையிலுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் இந்தியக் கம்பனியொன்றுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இந்த எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான உடன்படிக்கையொன்றில் பிரதமர் இம்முறை இந்தியாவுக்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது கையெழுத்திட இருக்கின்றார். அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலேயே இத்தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று தெரிவித்தது.

ஆனால் இத்தொழிற்சங்கம் குறிப்பிடுவது போன்று பிரதமர் நேற்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போதிலும், அவர்கள் குறிப்பிடுவது போன்று எண்ணெய்க் குதங்களை வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் கையெழுத்திடுவது தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.

இவை இவ்வாறிருக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது, இக்கூட்டத்தின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் வேலை நிறுத்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இவ்வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'ஸ்ரீ.ல.சு.கட்சி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்த போதிலும் அரச வளங்களைத் தனியார்மயப்படுத்துவதில்லை என்ற கொள்கையில் கட்சி உறுதியாக உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் 'திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில்அமைச்சரவையில் கலந்துரையாடப்படவும் இல்லை. அவற்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எதுவித முடிவையும் எடுக்கவில்லை'என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, தொழிற்சங்கங்கள் கற்பனையாகச் சிந்தித்து செயற்படுவதாகத் தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை பெற்றோலியத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று முன்தினம் மாலையில் பேச்சுவார்த்தை நடாத்தினர் இப்பேச்சுவார்த்தையின்  போது பிரதமர், ''திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் எதுவித இணக்கப்பாட்டுக்கு-ம் வரவில்லை' என உறுதிபடக் கூறியுள்ளார். அத்தோடு அது தொடர்பில் எழுத்து மூல உடன்பாட்டையும் பிரதமர் வெளிப்படுத்தி இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாகத் தொழிற்சங்கம் அறிவித்தது.

என்றாலும் இந்த எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் ஜனாதிபதி தன் நிலைப்பாட்டையும். தாம் தலைமை வகிக்கும் கட்சியின் நிலைப்பாட்டையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கையில், பிரதமரும் அவை தொடர்பில் எவ்வித இணக்கப்பாடும் எய்தப்படவில்லை என்பதைத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார். இந்நாட்டின் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

நிலைமை இவ்வாறிருக்கையில், இத்தொழிற்சங்கக் கூட்டமைப்பு எந்த அடிப்படையில் இத்தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தது? இதன் பின்புலம் என்ன? என்பன தொடர்பில் மக்கள் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நடவடிக்கை அற்ப அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாகக் கருதப்படு கின்றது. அதாவது இது கூட்டு எதிர்க்கட்சியினரின் தேவைக்காக முன்னெடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஏனெனில் இலங்கையில் மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்துவதற்கு அண்மைக் காலமாகக் கையில் எடுக்கப்படும் ஆயுதமாகவே தொழிற்சங்க நடவடிக்கை பெரும்பாலும் விளங்குகின்றது.

அந்தவகையில் இந்நடவடிக்கையின் ஊடாக மக்களை பலவித அசெளகரியங்களுக்கு உள்ளாக்கி நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு கொள்ளச் செய்யும் நடவடிக்கையாகவும் கூட இது இருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட விதமும், அது கைவிடப்பட்ட விதமும் அதனையே எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் நாட்டு மக்கள் மிகத் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

ஆகவே மக்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கை உபாயத்தை அதே மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையிலோ அற்ப அரசியல் நலன்களுக்காகவோ பயன்படுத்துவது தார்மீகமானதல்ல.