வாழ்வின் எழுச்சி வாழ்வாதார வேலைத் திட்டத்தின் கீழ் வாகரையில் உதவித் தாதியர் பயிற்சி

மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வின் எழுச்சி வாழ்வாதார வேலைத் திட்டத்திற்கூடாக வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பளிலுள்ள படித்து விட்டு வேலையற்றிருக்கும் தெரிவு செய்யப்பட்ட யுவதிகளுக்கு உதவித் தாதியர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச மக்களுக்கு சௌக்கிய சுகாதார சேவைகள் இன்றியமையாததாக இருப்பதால் இப்பயிற்சி நெறி மிகுந்த பயனளிக்கும் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அவ்விதம் 7 மாதகால பயிற்சியை நிறைவு செய்து கொண்ட 8 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (26.04.2017) வாகரைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி பயிற்சியை திறம்பட நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களை பயிலுநர்களுக்கு வழங்கி வைத்தார்.

இந்தப் பயிற்சி நெறிக்காக வாழ்வின் எழுச்சி வாழ்வாதார வேலைத் திட்டத்திலிருந்து  ஒரு பயிலுநருக்கு தலா 30 ஆயிரம் என்ற அடிப்படையில் 8 பேருக்குமாக மொத்தம் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக வாகரைப் பிரதேச சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் இராமலிங்கம் காளிராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாகரைப் பிரதேச சமூர்த்தி கருத்திட்ட முகாமையாளர் இராமலிங்கம் காளிராஜா உட்பட பயிலுநர்களும் கலந்து கொண்டனர்.