சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அம்பாறையில் அநீதி

( ஏ.எச்.ஏ. ஹுஸைன் )

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அம்பாறையில் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளது.

இது விடயமாக மேற்படி சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான அறிக்கையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த அமைப்பு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் சிங்களவர்களும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தமிழர்களும் அரசாங்க அதிபர்களாக அல்லது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு கடமை புரிந்து வருகின்றனர்.

ஆனால், பூர்வீகமாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற அம்பாறை மாவட்டத்தில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து அந்த மாவட்டத்திற்கு ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரேனும் நியமிக்கப்படவில்லை.

இது வெளிப்படையான ஓரவஞ்சனையாகவும் பாரபட்சமாகவும், பாகுபாடு காட்டும் தீர்மானமாகவும், உரிமை மீறலாகவும் இருந்து வருகின்றது.
எனவே, இந்த நல்லாட்சி அரசின் பங்காளிகளாகவுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரிடமும் மற்றும் ஏனைய அக்கறையுள்ள அனைத்துத் தரப்பாரிடமும் எடுத்துக் கூறி இந்த ஓரங்கட்டலை நீக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் அதீத அக்கறை எடுத்து அநீதிக்கெதிரான தீர்மானங்களை அமுல்படுத்தும் வழிவகைகளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.'