நாளைய தினம் இடம்பெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி பூரண ஆதரவு


நாளைய தினம் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களினால் கடந்த காலங்களில் இருந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவுகளின் போராட்டம் மற்றும் மக்களின் நிலமீட்புப் போராட்டங்கள் என்பன காலவரையறையின்றி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன இது தொடர்பில் அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு போராடுபவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு வருகின்றார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக அரசு ஒரு சட்டத்தையும் இயற்ற அதனடிப்படையில் செயலகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு உண்டு. எனினும் அதன் செயற்படு தண்மை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பது கவலையளிக்கின்றது.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கடையடைப்பு அழைப்பிற்கு எமது கட்சி பூரண ஆதரவை வழங்குகின்றது. எனவே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், அரசு இது தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டும் என்கின்ற வகையிலும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இந்நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.