புற்றுநோயாளியின் அறுவைச் சிகிச்சைக்கு ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உதவி

ஆலையடிவேம்பு பிரதேசத்தின் பொதுப்பணிகளில் ஈடுபாடுடையவரும், கிராம அபிவிருத்திச் சங்கம், சிவில் பாதுகாப்புக் குழு என்பவற்றில் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வருபவருமான அக்கரைப்பற்று - 9, மாயழகு வீதியில் வசித்துவரும் ராஜூ என்றழைக்கப்படும் கந்தையா இராசரெத்தினம் (தே.ஆ.அ.இல. 552061560V) என்பவர் கடந்த வருடம் முதல் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நிலையில் பதுளை, மட்டக்களப்பு, அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற்றுவரும் இவர், தனது குடும்பத்தின் வறுமை நிலையின் காரணமாகத் தனக்கு அவசரமாக மேற்கொள்ளப்படவுள்ள அறுவைச் சிகிச்சையின் பொருட்டு இயன்றளவு நிதியுதவியை ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கோடு அண்மையில் அக்கரைப்பற்று - 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோகராஜா இதயதினேஸ் ஊடாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸனிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த நோயாளியை பிரதேச செயலகத்துக்கு அழைத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சை விபரங்களைக் கேட்டறிந்துகொண்ட பிரதேச செயலாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸுக்கு வழங்கிய பணிப்புரைக்கமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு குறித்த நோயாளி தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டதன் பேரில் சேகரிக்கப்பட்ட ரூபாய். 30,900.00 உட்பட மொத்தமாக ரூபாய். 32,550.00 பணம் இன்று (26) காலை பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ் ஆகியோரது பிரசன்னத்துடன் பிரதேச செயலாளரால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் வைத்து குறித்த நோயாளியிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது குறித்த நிதியுதவியை நோயாளிக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸின் செயலைப் பாராட்டிய பிரதேச செயலாளர், குறித்த நோயாளியின் பொருளாதார நிலையறிந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடமிருந்து மட்டுமல்லாது, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் தனவந்தர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தனது நண்பர்கள் ஊடாகவும் நன்கொடைகளைப் பெற்று அவருக்கு உதவியிருப்பதென்பது ஒரு மிக உயர்ந்த மனிதாபிமானச் செயல் என்றும் கூறினார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ், குறித்த நோயாளிக்கு மலவாயிலில் ஏற்பட்ட புற்றுநோயை அகற்றக் கடந்த மாதம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோதும் அது பயனளிக்காமல் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள் மலம், சலம் இரண்டையும் வெளியேற்றும் வகையில் பிரத்தியேகப் பையொன்றை வயிற்றுப்பகுதியில் வைத்துள்ளனர். தினமும் அப்பையினை பராமரிப்பதில் எதிர்நோக்கும் கஸ்டத்தின் மத்தியில் அந்த நோயாளி தனது அன்றாடத் தொழிலுக்குச் செல்லமுடியாமல் அவதியுறுவதினை என்னால் அவதானிக்க முடிந்தது. எனினும் அவருக்கு இன்னுமொரு அறுவைச் சிகிச்சை மூலம் இந்நோயினை முடிந்தளவு குணப்படுத்துவது குறித்து தற்போது எதையும் நிச்சயமாகக் கூறமுடியாது என வைத்தியர்கள் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்த அவர், குறித்த அறுவைச் சிகிச்சையை இம்மாத இறுதிக்குள் செய்யவேண்டியுள்ளதனால் அதற்கு சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேல் பணம் தேவையாக உள்ளதன் நிமித்தம் அவரை உடன் எமது பிரதேச செயலகத்திற்கு அழைத்து பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய எமது அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களிடமிருந்து அவரவர் விரும்பும் பண உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு என்னாலான முயற்சிகளை மேற்கொண்டேன். அதன் பலனாகவே இன்று இந்த உதவித்தொகையை அவருக்கு வழங்கமுடிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தனது முகநூல் நண்பர்களிடமும் தங்களால் முடிந்த பண உதவியினைச் செய்ய முன்வரும்படி கோரிக்கையொன்றை விடுத்துள்ளேன். இதுவரை சிலரிடமிருந்து கிடைக்கப்பெற்ற பண உதவிகளை அவரிடம் கையளித்துள்ளேன். மேலும் கிடைக்குமிடத்து அவற்றையும் உடனடியாகக் கையளித்து அவரது அறுவைச் சிகிச்சைக்கு முடிந்தளவு உதவலாம் என்றிருக்கின்றேன் எனவும் கூறியதுடன், கருணையுள்ளம் கொண்ட பரோபகாரிகள் 0776320515 என்ற இலக்கத்தினூடாக அவரைத் தொடர்புகொண்டு அவரது அக்கரைப்பற்று, இலங்கை வங்கியின் கணக்கிலக்கம் 1058808 இல் பண உதவிகளை வைப்புச் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.