விஹாரையை உடனே அமைக்கவேண்டும் ! காலஅவகாசம் வழங்குவது, பிரச்சினையை மென்மேலும் அதிகரித்துவிடும்

இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப் பகுதியில், இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு காணி விவகாரத்துக்கு, மே மாதம் 1ஆம் திகதிக்கு முன்னர் தீர்வொன்று எட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த விவகாரம் தொடர்பில், அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்கஹ தலைமையில், மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் நேற்று (25) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டது.    
இந்த காணி தொடர்பில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காலஅவகாசம் தேவையில்லை. இந்த புனித பூமியில், விஹாரையை அமைக்கவேண்டும். அதுவே, சகலரினதும் பரிந்துரையாகும். அவ்வாறான நிலைமையில், காலஅவகாசம் வழங்குவது, பிரச்சினையை மென்மேலும் அதிகரித்துவிடும். ஆகையால், காலம்தாழ்த்தவேண்டிய தேவையில் இல்லையென, அந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.    

அவ்வாறானதொரு தீர்மானத்தை இன்றையதினமே எடுப்பீர்களாயின், விஹாரையை இன்றே நிர்மாணிக்கமுடியும் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.

    எனினும், புனித பூமியை கொண்டுள்ள இந்த காணி தொடர்பிலான சட்டரீதியிலான ஆவணம், இரண்டு நபர்களிடம் இருக்கின்றது. ஆகையால், அவ்விருவருக்கும் மாற்று இடங்களை பெற்றுகொடுக்கவேண்டும் என்று அம்பாறை மாவட்ட செயலாளர் துசித்த பி. வணிகசிங்கஹ சுட்டிக்காட்டியுள்ளார்.    

இவ்விருவருக்கும் பெற்றுகொடுப்பதற்கு மாற்று காணிகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும், காணியை அளவீடும் நடவடிக்கை நாளை (இன்று) முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அதன்பின்னர், விஹாரையை நிர்மாணிப்பணிகளை ஆரம்பிக்கலாம். அது பிரச்சினையில்லை என்றும் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.