வடகொரியா போர் ஒத்திகை : அமெரிக்க நீர்மூழ்கி வருகையால் கொரியாவில் போர் பதற்றம் அதிகரிப்பு !


அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பல் தென் கொரியாவின் பூசன் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. இதற்குப் பதிலடியாக வடகொரியா நேற்று போர் ஒத்திகை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

வடகொரியா 6-வது அணு ஆயுத சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாடு அணுஆயுத சோதனை நடத்தினால் அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர்க் கப்பல் தலைமையில் ஏராளமான சிறிய ரக போர்க் கப்பல்கள் தென்கொரியாவில் குவிக்கப்பட்டுள்ளன. ஏவுகணை தடுப்பு சாதனம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. அணுஆயுதங்களை வீசும் திறன் கொண்ட போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க கடற்படையின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க் கப்பலான யு.எஸ்.எஸ். மிக்ஸிகன் நேற்று தென்கொரியாவின் பூசன் துறைமுகத்துக்கு வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் மேலும் அதிகரித் துள்ளது.

வடகொரியா போர் ஒத்திகை

இதனிடையே அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் வோன்சன் எல்லைப் பகுதியில் வடகொரியா நேற்று போர் ஒத்திகை நடத்தியது. வடகொரிய ராணுவத்தின் 85-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முப்படைகளும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.