ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தியவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது, நீதிமன்ற கட்டளையை கிழித்தெறிந்தது, நீதிமன்றத்தை உதாசீனப்படுத்தியவர்களை மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை மே மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருகோணமலை பிரதம நீதவான் எம்.எச்.எம். ஹம்சா நேற்று (26) கட்டளை பிறப்பிததுள்ளார்.

பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படாத வகையிலும், பொது மக்களுக்கு இடையூறு இன்றியும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துமாறு திருகோணமலை தலைமையக பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற கட்டளையை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகளிடம் பொலிஸார் சமர்ப்பித்த பின்னர், அதனை அவர்கள் கிழித்தெறிந்ததுடன், பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார், நீதிமன்றத்தில் நேற்று (26) முறைப்பாடு தாக்கல் செய்திருந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.