'த.தே.கூ எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்த்தால் அது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்'

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்த்துக்கொண்டிருந்தால்,  அது மக்களுக்குச் செய்யும் துரோகமாக அமைந்துவிடும்; எனக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.  

 ஒருவர் செய்யும் சேவையை இன்னொருவர் தடுக்கும்  செயற்பாடுகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும்; அவர் கூறினார்.   வெல்லாவெளி, விவேகானந்தபுரம் கிராமத்தில் வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று    (25)  நடைபெற்றது. இதில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வீடுகள் மற்றும் காணி அற்றவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், ஐந்து இலட்சம்  ரூபாய் பெறுமதியான 50 வீடுகளுக்காக அங்கு அடிக்கல் நாட்டப்பட்டது.   
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 

'மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதாயின், சகல கட்சிகளும் இணைந்து பொறுப்புடன்; செயற்பட வேண்டும். தேர்தல் காலங்களில் எமக்குள் இருக்கும் கருத்துகளை, வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் மத்தியில் விதைக்கலாம்.   மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளுக்கு சாதகமான விடயங்கள் என்னென்ன இருக்கின்றனவோ, அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். எனவே, நாங்கள்  தொடர்ந்து எதிர்ப்பு அரசியல் செய்து மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யும் வேலையைச் செய்யக்கூடாது' என்றார்.