31ஆம் திகதியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை - கொழும்புக்கு இடையில் தினமும் விமான சேவை


இராணுவ கட்டுப்பாட்டு விமானங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு விமான நிலையம், இம்மாதம் 31ஆம் திகதியிலிருந்து தனியார் மற்றும் வர்த்தக நோக்கிலான ஜெட் விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவுள்ளதாக சிவில் விமான அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஏ. நிமலசிறி தெரிவித்தார்.

நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்விடயத்தைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

“வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மட்டக்களப்பு விமான நிலையம் இம்மாதம் 31ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சிவில் விமான அதிகார சபைக்கு கையளிக்கப்பட வேண்டும்.

இதன்படி சிவில் விமானப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் விதமாக இரண்டு விமான சேவைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் கொழும்புக்கு இடையில் தினமும் நடைபெறவுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.