புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இளைஞர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

(சசி)
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் புதுக்குடியிருப்பு மாவட்ட இளைஞர் தொழில்பயிற்சி நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருட ஜூலை தொடக்கம் டிசெம்பர் வரைக்குமான காலப்பகுதியில் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கின்ற நிகழ்வு தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ந.குகதாஸ் அவர்களின் தலைமையில் 22.05.2017 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் முதன்மை அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் மாகாணப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர் கல்வியல் தவிசாளருமான பொன்.செல்வநாயகம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண நிருவாக உத்தியோகத்தர் கே.தியாகராஜா, விஷேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஜே. கலாராணி, புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலத்தின் பிரதி அதிபர் அ.குலேந்திரராசா, தகவல் நிலைய உத்தியோகத்தர் ரி. மகேந்திரராசா ஆகியோரும் பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்களும் கலந்கொண்டனர்.

இந் நிகழ்வில் கணிணி பாடநெறி, தையல் கலை, அழகுக் கலை. ஆங்கில மொழிப் பாடநெறி, சிங்கள மொழிப் பாடநெறி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற 100 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.