ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும் ; குழு தீர்மானத்தின்படி வவுணதீவில் மண் அகழ்விற்கு உடனடித் தடை!

ஊடகத்தை நான் எப்போதும் மதிப்பவன், ஒரு சில ஊடகங்கள் வௌிப்படையாக பொய்களை சொல்கின்றன. ஊடகங்களில் செய்திகள் எப்போதும் சரியாக போகவேண்டும்,  இந்த விடயத்தில் நான் எப்போதும் அவதானத்துடனே இருந்து வருகின்றேன். ஊடகங்கள் நடுநிலையாக இருக்க வேண்டும் அது சரியானதாகவும் பாரபட்சம் பக்கச்சார்பு அற்றதாகவும் இருக்கவேண்டும்.

நாங்கள் மக்களுக்காக சரியாக முறையில்வேலை செய்ய வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்திருக்கின்றோமே தவிர வேறு வேலைக்காக வரவில்லை. என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும் மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு தலைவருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் திங்கட்கிழமை 22 ஆம் திகதி பிற்பகல் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பி.இந்திரகுமார், கிழக்கு மாகாணபை உறுப்பினர்களாக கே.கருணாகரம், எம்.நடராஜா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை, மீள்குடியேற்ற அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் முகமட் றிஸ்வான் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்


இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொடர்ந்து பேசுகையில், நான் மொத்தத்தில் ஊடகங்களை பிழை சொல்லவில்லை.எங்களை  மட்டம் தட்ட வேண்டும் என்று ஓர் இருவர் இருக்கின்றார்கள் எதிர்காலத்தில் அவ்வாறான நபர்களை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டிவரும். அவ்வாறானவர்கள் யார் என்பதை உரித்துக் காட்டவேண்டிவரும். உண்மையில் போலித்தனமா வேலைகள் இருக்குமானால் அதை வெளிக்காட்டினால் நாங்கள் பாராட்டுகின்றோம்.அதைவிடுத்து அவர்கள் தேவையற்ற பிரச்சனையை ஏற்படுத்தினால் அவர்களையும் அவர்கள் விடும் தவறுகளையும் வெளிப்படுத்த வேண்டிவரும். என தெரிவித்தார்.


அவர் மேலும் பேசுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்து பன்னிரெண்டு வருடங்கள் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்வதியல் நியாயம் உள்ளது அதைவிடுத்து கல்வியில் பின்தாங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களில் மூன்று, நான்கு வருடங்கள்  பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதில் எந்த நியாயமும் இல்லை.   இது தொடர்பில் கிழக்கு  மாகாண கல்வியமைச்சர், கிழக்கு மாகாண ஆளுனர், மாகாண பணிப்பாளர் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தகவல் ஒன்று கிடைத்து இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதென. பின்னர் கிழக்கு மாகாண பணிப்பாளர் இரத்துச் செய்யப்படவில்லை என அறிவித்துள்ளார். எமது மாகாணத்தின் கல்வி நிலை பின்தள்ளப்பட்டமைக்கு இவ்வாறான காரியங்களும் ஒரு காரணமாகும்.


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தல் சாதாரண தரத்தின் அடைவு மட்டம் ஆரம்ப காலத்தில் 21வீதமாக இருந்தது பின்னர் அது 31 வீதமாக அதிகரித்து அதன்பின்னர் சில காலங்களில் 41வீதமாகி. இப்போது கடைசி நிலையில் அதாவது 98வது நிலையில் இருக்கின்றது. அந்தளவிற்கு இந்த வலயத்தில் கல்வி அடைவு வீழ்ச்சியடைந்துள்ளது.

மற்றும் இந்த வவுணதீவு இப் பிரதேசத்தில் மண் அகழ்வு பிரச்சனை பல வருடகாலமாக உள்ளது. வேறு இடங்களில் மண் அகழ்விற்காக அனுமதியை பெற்றுவிட்டு ஆற்றில் அகழ்கின்றனர். இது தொடர்பில் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கூறியதற்கமைவாக இந்த அபிவிருத்திக் குழு கூட்டத்தின் இன்றைய தீர்மானத்திற்கமைவாக இப் பிரதேசத்தில் மண் அகழ்விற்கு தடை விதிக்கப்படுகின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.


இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பேசுகையில், கல்குடா மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஆசிரியர்களை தான்தோன்றித்தனமாக இடமாற்றம் செய்கின்றார்கள் இந்த வலயங்களிலிருந்து சில மாதங்கள் கடமையாற்றிய பின் அம்பாறைக்கும் கொண்டு செல்கின்றார்கள் இவ்வாறான செயற்பாடுகளால்தான் இந்த மாவட்டம் இவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றது. எனத் தெரிவித்தார்.


இக் கூட்டத்தின்போது வீட்டுத் திட்டங்கள், குடிநீர் பிரச்சனை, வீதி அபிவிருத்தி, சுகாதாரம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டது.