'பாடுமீன் கிண்ணம்' மாபெரும் மகளிர் கிரிக்கட் போட்டியில் ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய அணி வெற்றி.


இலங்கை மகளிர் கிரிக்கட் சபையின் பங்களிப்புடனும், மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர்  லவக்குமார் அவர்களின் பெருமுயற்சியாலும் மட்/மட்  ஆரையம்பதி இராமகிருஷ்ண  மிஷன் மகா வித்தியாலய மகளிர் கிரிக்கட் அணிக்கும், மட்/ககு. சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய மகளிர் கிரிக்கட் அணிக்குமிடையில் 2017-05-18 வியாழக்கிழமை மட். சிவாநந்த வித்தியாலய மைதானத்தில் நடைபெற்ற  இருபதுக்கு இருபது (20:20) 'பாடுமீன் கிண்ணம்' மாபெரும் மகளிர் கிரிக்கட் போட்டியில்  மட்/மட் ஆரையம்பதி இராமகிருஷ்ண  மிஷன் மகா வித்தியாலய மகளிர் கிரிக்கட் அணியினர் வெற்றி ஈட்டினர்.



இப்போட்டிக்கு அதிதிகளாக இலங்கை மகளிர் கிரிக்கட் சபையின் தலைவி திருமதி. அப்ஸரா திலகரத்தின மற்றும் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான  ஹசான் திலகரத்தின ஆகியோருடன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்  க.பாஸ்கரன், மற்றும் மட்/மட் ஆரையம்பதி இராமகிருஷ்ண  மிஷன் மகா வித்தியாலய அதிபர் சு.வன்னியசிங்கம், மட்/ககு. சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய அதிபர்.ஆ.தவராஜா, இலங்கை கிரிக்கட் சபையைச் சேர்ந்த கிழக்கு மாகாணத்துக்குரிய தலைமைப் பயிற்றுநர்  B.A.T.N. விமலவீர மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் சங்க தலைவர் பொறியியலாளர்  N.D.ரஞ்சன், மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் பயிற்றுநர் ஜனாப்.P.K.அன்வர்டீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

போட்டி முடிவில் இரு  அணியினருக்கும்  கிண்ணங்களுடன் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும் பாடசாலை மாணவர்களின் பயிற்சிகளுக்கென ஒரு தொகை விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன.

இப்போட்டிக்கு டயலொக் நிறுவனத்தினர் பூரண அனுசரணையினை வழங்கியிருந்தனர்.