மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர் தின சிறப்பு நிகழ்வுகள்.



(துறையூர் தாஸன்)

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்த தாதியர் தின நிகழ்வு சிரேஸ்ட தாதிய உத்தியோகத்தர் பூ.புஸ்பராஜா தலைமையில் நேற்று (21) இடம்பெற்றது.

மட்டு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கம் பிரதம அதிதியாகவும் விசேட தர பிரதம தாதிய உத்தியோகத்தர் நா.கனகராஜா சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டார்.
இதன் போது தாதிய உத்தியோகத்தர்களால், புளோரன்ஸ் நைற்றிங் கேள் அம்மையாருக்கு மலர் மாலை அணிவித்து  விளக்கேந்தி மரியாதை செலுத்தியிருந்தனர்.


ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற,சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற மற்றும் உயர்தரப் பரீட்சையில் தேறி பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான தாதிய உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு இதன் போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நீண்ட காலம் பணி புரிந்து இளைப்பாறிய தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கத்தால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தாதியர் தினத்தை முன்னிட்டு கடந்த 2017.05.07 ஆம் தேதியன்று பாட்டாளி புரம் மைதானத்தில் கிறிக்கெற் சுற்றுப் போட்டியும் 12 ஆம் திகதி நூலக திறப்பு விழாவும் 17 ஆம் திகதி குருதித் தான நிகழ்வும் இடம்பெற்று நேற்றைய தினம்(21) தாதிய உத்தியோகத்தர்களால் பன்மைத்துவ கலை கலாசார நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசேட தர தாதிய உத்தியோகத்தர்,தாதிய பரிபாலகிகள்,தாதிய சகோதரிகள்,விடுதிப் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள்,தாதிய உத்தியோகத்தர்கள்,துணை மருத்துவ உத்தியோகத்தர்கள்,சுகாதார உதவியாளர்கள் உள்ளிட்ட பல தரப்பட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.ந.ஜெயகரனின் நன்றியுரையுடன் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்றது.