தொழில்நுட்ப வளர்ச்சியின் பாதகமான விளைவுகள் !

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக நவீன சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவது ஒருபுறமிருக்க, அதன் விளைவாக மனித குலத்துக்கு தீங்குகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. மக்களுக்கு இன்றைய காலத்தில் பெரும் தீங்குகளை விளைவித்துக் கொண்டிருக்கும் நவீன சாதனங்களில் ஒன்றாக ‘ஸ்மாட் போன்’ மாறியிருக்கின்றது.

‘ஸ்மாட் போன்’ கைத்தொலைபேசியின் வாயிலாக இன்றைய நவீன யுகத்தில் மக்களுக்குக் கிடைக்கின்ற அனுகூலங்களைப் பார்க்கிலும் பிரதிகூலங்களே கூடுதலாக ஏற்படுவது தெரியவந்துள்ளது. ஸ்மாட்போன்களின் பயன்பாட்டினால் தற்காலத்தில் ஏற்படுகின்ற விபத்துகளும், மரணங்களும் இதற்கு சான்றாக அமைகின்றன.

வீதியில் நடந்து செல்லும் போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால், வீதிவிபத்துகள் பெருகியுள்ளன. பலர் காயமடைவதையும், மரணங்கள் சம்பவிப்பதையும் நாம் காண்கிறோம். கைத்தொலைபேசியைப் பயன்படுத்தியபடி தண்டவாளத்தின் மீது நடந்து சென்ற வேளையில் புகையிரதத்தால் மோதுண்டு உடல் சிதறிப் பலியாகிப் போனோரின் எண்ணிக்கையும் ஏராளம்.

இவ்வாறான மரணங்கள் துரதிர்ஷ்டமும் பரிதாபமும் மிகுந்தவையாகும். கைத்தொலைபேசிப் பாவனையில் காணப்படுகின்ற ஆபத்துகள் தொடர்பாக ஊடகங்களில் எச்சரிக்கை விளம்பரங்கள் வெளிவருகின்ற போதிலும் இவ்விடயத்தில் எதுவித பலனும் ஏற்பட்டதாக இல்லை. ‘ஸ்மாட் போன்’ பாவனையினால் விபத்துகளும் மரணங்களும் அதிகரித்தபடியே செல்கின்றன.

கல்வியறிவற்றோர் மாத்திரமன்றி நன்கு கற்றவர்களும் கூட கைத்தொலைபேசியின் பாவனையினால் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பதுதான் இங்கு வியப்புக்குரிய விடயம். சமீப காலமாக கைத்தொலைபேசியின் விளைவாக சம்பவித்துள்ள மரணங்களை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்றபடி ‘செல்பி’ எடுத்துக் கொண்ட வேளையில், நீருக்குள் தவறி விழுந்து வைத்தியர் ஒருவர் மரணமான சம்பவம் இறுதியாகப் பதிவாகியிருக்கின்றது. ‘செல்பி ‘ மோகம் என்பது எவரையுமே விட்டு வைக்கவில்லையென்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வோர், விந்தைமிகு இடங்களில் நின்றபடி தங்களைப் ஒளிப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவது இன்று நேற்றுத் தோன்றிய அவா அல்ல. ஒளிப்படக் கருவி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்தே மனிதனைப் பீடித்துள்ள ஆசை இது. ஆனால் ஒருவரை மற்றவர் ஒளிப்படம் எடுப்பதனால் விபத்தோ மரணமோ சம்பவித்தது கிடையாது.

தன்னைத் தானே ஒளிப்படம் எடுத்துக் கொள்வதற்கான ‘ஸ்மாட்போன்’ என்ற சாதனம் அறிமுகமானதன் பின்னரே விபரீதமும் வந்து சேர்ந்தது. புகையிரதப் பாதை, உயர்ந்த கட்டடங்களின் உச்சிகள், கடலோரம், நீர்வீழ்ச்சி, மலையுச்சிகள் என்றெல்லாம் பல்வேறு இடங்களுக்கும் மனிதனின் ‘ஷெல்பி’ ஆசை பரந்து விரிந்ததனால் பலர் அநியாயமாக உயிரிழந்து போயிருக்கிறார்கள்.

‘ஸ்மாட் போன்’ என்பது இன்றைய காலத்தில் மனிதனை ஆட்கொண்டு விட்ட ஒருவித போதை என்று கூறுவதில் தவறில்லை. இன்றைய இளைஞர், யுவதிகள் 'ஸ்மாட் போன்' என்ற சாதனத்துடனேயே எந்நேரமும் உறவாடிக் கொண்டிருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் மனிதர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. கைத்தொலைபேசியைக் கையில் ஏந்தியபடி அவர்கள் பித்துப் பிடித்தவர்களைப் போல இருப்பதைப் பார்க்கின்ற போது ஒரு விடயம் மாத்திரம் தெளிவாகப் புலப்படுகின்றது.

இதனை ஒருவித உளவியாதி என்று கூறுவதில் தவறில்லை. அரைமணி நேரத்துக்கு அவர்களிடமிருந்து கைத்தொலைபேசியைப் பிடுங்கி எடுத்து விட்டால் அவர்களால் உயிர் வாழ முடியாது.

நவீன சாதனங்களின் வருகையானது மனித குலத்தை எங்கே கொண்டு சென்று விட்டிருக்கிறதென்பது இப்போது புரிந்து விட்டது. இவ்வாறான போதையிலிருந்து மீள்வது இலகுவானதல்ல. நவீன தொலைபேசி சாதனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களது வர்த்தகப் போட்டியில் இளைஞர்களே பிரதான இலக்கு!

இதன் பிரதிகூலங்கள் குறித்து இன்றைய உலகம் கவலைப்பட்டுக் கொள்வதாகத் தெரியவில்லை. முகநூல் என்பதன் வாயிலாக இளைஞர், யுவதிகள் உட்பட மக்கள் மத்தியில் பெருகியுள்ள சீரழிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதையிட்டு பொறுப்பு வாய்ந்த தரப்பினர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. ஒழுக்க விழுமியங்களையும் கலாசார பண்பாடுகளையும் முகநூல் துடைத்தெறிந்து கொண்டிருப்பதையிட்டு சமூக ஆர்வலர்களும் கவலைப்படுவதைக் காண முடியவில்லை.

‘ஸ்மாட்போன்’ பாவனை மனிதனுக்குத் தீங்கு தருவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவராவது பேசுவது முடியாத காரியம். அக்கருத்தை ஏற்றுக் கொள்வதற்கு இளைஞர், யுவதிகள் தயாராக இல்லை.

க. பொ. த. சாதாரண தர வகுப்பு மாணவருக்கே அவர்களது பெற்றோர் ‘ஸ்மாட்போன்’ சாதனத்தை கட்டாயமாக வாங்கிக் கொடுக்க வேண்டுமென்ற நிலைமை இப்போது உருவாகி விட்டது. அதனை பெற்றோரிடம் வலிந்து கேட்கும்படியாக இன்றைய எமது சமூகக் கட்டமைப்பு மாற்றம் பெற்றுவிட்டதென்பது புரிகின்றது.

‘ஸ்மாட்போன்’ சாதனத்துக்குள் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயனுள்ள ஏராளமான விடயங்கள் பொதிந்துள்ளன. அதேசமயம் இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய ஏராளமான ஆபத்துகள் அதற்குள் மறைந்துள்ளன. மனித சமுதாயத்துக்கு ஆக்கத்தைத் தந்துள்ள அறிவியல் வளர்ச்சியானது, அழிவுக்கும் வழிகோலும் போது யாரால்தான் அதனைத் தடுத்து நிறுத்த முடியும்?