மருத்துவர்களின் சேவைப்புறக்கணிப்பு காரணமாக அசௌரியங்களை எதிர்நோக்கிய நோயாளர்கள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பிரதான ஐந்து கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி இன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் 24 மணிநேர வேலை நிறுத்தத்தினால் நாடு முழுவதிலும் உள்ள அரச தனியார் வைத்தியசாலைகளின் சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன.

வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை வழங்குவதற்கு வைத்தியர்கள் இன்மையால் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளர்கள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கியதுடன் வைத்தியர்களின் சேவை மீது அதிருப்தி அடைவதாகவும் நோயாளர்கள் தெரிவித்தனர்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய அனைத்து பல்கலைகழகங்களின் மாணவர்கள் மீது அண்மையில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதனை கண்டித்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனிருத்த பாதனியவை கைது செய்வதற்கு அரசாங்கம் மறைமுகமான சூழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றது, மாலபே தனியார் கல்லூரி மாணவர்களை வைத்தியர்களாக உள்வாங்கக் கூடாது, அரச மருத்துவத்துறையினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய இலங்கை பொருளாதார ஒப்பந்தத்தை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.