காணாமல்போனோரின் தகவல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தயார்: சம்பூர் நிகழ்வில் ஜனாதிபதி

காணாமல் போனவர்கள் தொடர்பான தெளிவான தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (சனிக்கிழமை) சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களை முன்வைத்து, எங்காவது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுமாயின் அந்த இடங்களை பரிசீலிப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் உருவாக்கும், இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் விதந்துரைகளை கருத்திலெடுத்து காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழு விரைவில் நியமிக்கப்படும்.

2015 ஆண்டில் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ மாணவியருடன் தோன்றும் புகைப்படத்தை இணையத்தளங்களில் வெளியிட்டு தன்னுடன் இருந்த இந்த பிள்ளை காணாமல் போயுள்ளதாக முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் பிற்போக்குவாதிகளின் அரசியல் சதியாகும். அவ்வாறு அந்த பிள்ளைகள் காணாமற் போயிருந்தால் அவர்க தேடுவதற்காக நானும் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்குவேன்.

கடந்த 18 ஆம் திகதி நான் கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய இருந்ததாகவும், தன்னை வர விட முடியாதென வடக்கில் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அன்றைய தினம் அவ்வாறு விஜயம் மேற்கொள்வதாக இருக்கவில்லை. பெற்ற சுதந்திரம் மற்றும் சமாதானத்தின் பெறுமதியை புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். பெற்ற சமாதானத்தை மக்களை தவறாக வழிநடத்தி சீர்குலைக்க முன்னெடுக்கப்படும் பிற்போக்குவாதிகளின் சதிகளை தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்.
அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை நிறுவுவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டதன் பின்னர் அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நானும் பிரதமரும் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். தெற்கைப் போன்றே வடக்கிலும் அபிவிருத்தியை நான் தாமதப்படுத்தவில்லை. பெற்ற சுதந்திரத்தை பாதுகாத்து தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர அனைத்து அரசியல் தலைவர்களும் பாடுபட வேண்டும்.“ எனக் குறிப்பிட்டார்