ஏறாவூர் இளந் தாரகை விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கால்பந்தாட்ட இறுதிப் போட்டி

(எஸ்.சதீஸ்)

கிழக்கு மாகாண ரீதியில் ஏறாவூர் இளந் தாரகை விளையாட்டுக்கழகம் ஒழுங்குசெய்த, அஸ்ஸஹீத் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால்கிண்ணம், அஸ்ஸஹீத் புகாரி விதானையார் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.

ஏறாவூர் இளந் தாரகை விளையாட்டுக்கழகத்தின் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிழக்கு மாகாண கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான மாபெரும் இறுதிச் சுற்றுப் போட்டி வெள்ளிக்கிழமை 19ஆம் திகதி ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

சுமார் ஒரு மாதகாலமாக 30 அணிகள் பங்குகொண்ட இப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மட்டக்களப்பு, புன்னைச்சோலை கோப்ரா விளையாட்டுக் கழகமும் அதனை எதிர்த்து மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டது.

இப் போட்டியில் 1:0 என்ற கோள் விகிதத்தில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம் வெற்றியடைந்து,  வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், விசேட அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர்  அலிஹிர் மௌலானா, சிறப்பு அதிதியாக இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.