இலஞ்சம் பெற முற்பட்ட 22 அதிகாரிகள் இதுவரை கைது

இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 22 அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் பெற முற்பட்டதாக 29 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆணைக்குழு, அது குறித்த 20 சுற்றிவளைப்புக்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், பிரதேச செயலக அலுவலக அதிகாரிகள் நால்வர், பிரதேச சபை, நகர சபை அதிகாரிகள் நால்வர், கல்வித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இருவர் போன்றோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலஞ்சம் பெற முற்படுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 1954 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லையாயின் நேரில் ஆணைக்குழுவுக்கு வருவதன் மூலம் அல்லது தபால் மூலம் தெரியப்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.