கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 50 சதவீதமானோரே வாக்களிக்கின்றார்கள்.




கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களித்தால், தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியும். என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, ‘தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு என்றால் என்னவென்று தெரியாது.

வடக்கு மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேரும் கிழக்கு மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 36 பேரும் இருக்கின்றனர், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் 40 சதவீதமும், முஸ்லிம்கள் 37 சதவீதமும், சிங்களவர்கள் 23 சதவீதமுமாக உள்ளார்கள்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களித்தால், தமிழ் முதலமைச்சர் ஒருவரைப் பெற்றுக்கொள்ள முடியும்.

40 சதவீதமாக தமிழர்கள் உள்ள கிழக்கு மாகாணத்தில், தேர்தலின்போது 50 சதவீதமானோரே வாக்களிக்கின்றார்கள். தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்காமல் விட்டு, தமிழ் முதலமைச்சரைப் பற்றி நாம் கதைக்க முடியாது.

எனவே, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களின்போது, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஒன்றுபட்டு 95 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என்றார்.