பாசிக்குடாவின் அவலநிலை செய்தி தொடர்பில் கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் அவர்களின் விளக்கம்



"  பாசிக்குடாவின் அவலநிலை அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படவில்லையா "  என நேற்று வெளியான செய்தி தொடர்பில் கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்  அவர்களின் விளக்கம்

  • பாசிக்குடா சுற்றுலாப் பிரதேசம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான அதிகாரப் பரப்பிலுள்ள பிரதேசமாகும். இங்கு எந்தவொரு நடவடிக்கையினையும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் இணக்கப்பாடில்லாமல் மேற்கொள்ள முடியாது.
  • பாசிக்குடா சுற்றுலாப் பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் அனைத்து பணிகளும் அவர்களாலேயே மேற்கொள்ளப்படவேண்டுமென இறுக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதோடு; இற்றைவரை பிரதேசசபைக்கு கையளிப்புச் செய்யப்பட வேண்டிய பொதுமக்கள் பாவனைக்கான இடங்களும் எமக்கு கையளிக்கப்படவில்லை. 
  • பாசிக்குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அவசியமான நலன்கருதி பிரதேசசபையின் வேண்டுகோளுக்கமைய கிழக்கு மாகாண முதலமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்ட பொதுப் பணிகள் கூட சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் தடைசெய்யப்பட்டுள்ளது   .
  • பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அங்கு திண்மக்கழிவகற்றல், பொதுச் சுகாதாரம் போன்ற நடவடிக்கைகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சபையின் 10 ஆளணியினரும், 02 வாகனங்களும் முழுமையாக பயன்படுத்தப்படுகின்றன. இதற்கேற்படும் செலவு அங்கிருந்து வருமானமாக பெறப்படும் தொகைகளை விட அதிகமானதாகும். 
  •  பலமடங்கு வருமானம் பெறும் சபையாக இப்பிரதேச சபை கூறப்பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பான மிகைப்படுத்தப்பட்ட செய்தி என்பதை சபையின் ஆவணங்களை எவரேனும் என்னேரத்திலும் பரிசீலித்து தெரிந்து கொள்ளலாம். உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதான வருமான மூலமான ஆதனவரி அறவீட்டு நடவடிக்கைகள் தற்போதுதான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
  • சுற்றுலா விடுதிகளின் புறழ்வு வருமானத்தின் ஒரு வீதத்தினை பெற்றுக் கொள்வதற்கான சட்ட நடவடிக்கைகள் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • மேலும், குறித்த செய்தியில் இப்பிரதேச சபையின் நிதி 05 மில்லியன் ஏறாவூர் நகர சபைக்கு கடனாக வழங்கப்பட்டமை குறிப்பிடப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு மீளளிப்பு செய்யப்பட வேண்டிய பல மில்லியன் ரூபாய்கள் இப்பிரதேச சபையின் வைப்புக் கணக்கில் உள்ளது. இந்நிதியிலிருந்து குறித்த தொகை உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்பிற்கமைய ஏறாவூர் நகர சபைக்கு கடனாக வழங்கப்பட்டு அக்கடன் தொகை மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்கொடுக்கல் வாங்கல் இப்பிரதேச சபைக்குரிய நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்டதல்ல .
எஸ்.எம்.சிஹாப்தீன்,
செயலாளர்,
கோறளைப்பற்று பிரதேசசபை,
வாழைச்சேனை.