பாசிக்குடாவின் அவலநிலை அதிகாரிகளின் கண்ணுக்கு புலப்படவில்லையா



( புகழேந்தி )  ஆசியா மட்டத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளில் ஒன்றுதான் பாசிக்குடா கடற்கரை இந்த பாசிக்குடா கடக்கரையானது கடலாக இருந்தாலும் பெரிய அளவில் அலைகள் அற்ற நீண்டதூரம் கடலினுள் சென்று நீராடுவதற்கு ஏற்றால்போல இயற்கையாகவே அமைந்து காணப்படும் செயற்கை நீர்தடாகங்கள் போன்றது.

இதனாலே ஆதிகாலம் தொடக்கம் பாசிக்குடா கடற்கரை உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்து காணப்பட்டது இதற்கு சான்றாக பழைய இலங்கை படத்தை பார்த்தால் மட்டக்களப்பு காணப்படாமல் பாசிக்குடாவே குறிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு பிரபல்யம் அடைந்து காணப்பட்ட மட்டக்களப்பின் உல்லாச சொர்க்காபுரியான பாசிக்குடா யுத்த காலத்தில் கடுமையான முறையில் பாதிப்படைந்து காணப்பட்டாலும் யுத்த முடிவின் பின்னர் அபார வளர்ச்சியை கண்டுள்ளது இந்த அபார வளர்ச்சியானது வெளிநாட்டு சுற்றுலா துறையினரை கவரும் வண்ணம் ஐந்து நட்சத்திர மூன்று நட்சத்திர ஆடம்பர உல்லாச விடுதி அமையப்பெற்றதினால் அடைந்துள்ளதே தவிர சாதாரண பொதுமக்களுக்கு எதுவித வசதிகளும் அற்றே காணப்படுகிறது எனலாம்.

ஆம்,இந்த பாசிக்குடா கடற்கரையில்  பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட கடற்கரை பிரதேசத்தில்  நீராடி தமது விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பெருமளவிலான உள்ளூர் தமிழ் சிங்கள சுற்றுலா பிரயாணிகள் நாளாந்தம் வருகை தந்தவண்ணம் உள்ளனர் வருபவர்களிடம் வாகன தரிப்பிட பணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த பாசிக்குடா பிரதேசம் வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட எல்லையினுள்ளேயே வருகிறது இந்த பிரதேச சபைக்கு இங்கு வரும் மக்களாலும் இந்த பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதிகளாலும் பலதரப்பட்ட வருமானங்கள் வருகின்றன அதோடு இந்த பிரதேச சபை மற்றைய பிரதேச சபைகளை விட பலமடங்கு வருமானம் ஈட்டும் சபையாக காணப்படுகிறது
எனினும் மட்டக்களப்பு கல்லடி கடக்கரையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இவ்வளவு மக்கள் வருகைதரும் இந்த கடக்கரையில் மக்களுக்கான வசதிகள் படு மோசமான நிலையில் உள்ளது.

வாகன தரிப்பிடத்திற்கும் கடற்கரைக்கும் இடையிலான பாலம் உடைந்து விழும் நிலையில் உள்ளது அதேவேளை இங்கு வரும் மக்கள் இருப்பதற்கு ஒரு முறையான இருப்பிடங்களோ அல்லது இருந்து உணவு அருந்துவதற்கான வசதிகளோ இன்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்

அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள் பல செயல்திட்டங்களை செய்கின்றபோதும் இந்த முக்கியமான பிரதேசத்தில் எதுவிதமான வசதிகளையும் செய்து கொடுக்காமல் இருப்பதும் கவலைக்குரியதே.
இந்த பிரதேச உல்லாச விடுதிகளின் கழிவுகளை அகற்றுவதற்காக பெரிய தொகைகளை மாதாந்தம் பிரதேச சபை அறவிடுவதாகவும் தெரியவருகிறது.

வாழைச்சேனை பிரதேசத்தில் பாரிய அளவு வேலைத்திட்டங்கள் செய்யவேண்டிய நிலையில் இவ்வாறான குறைபாடுகளை வைத்துக்கொண்டு அண்மையில் ஏறாவூர் பிரதேச சபைகு பாரிய நிதியினை இப்பிரதேசசபை கடனாக வழங்கியமை எல்லோரும் அறிந்ததே.

இப்படியான குறைகளை கண்டு நம் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி நம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டியது யார் கடமை ?
உரிய அதிகாரிகளின் கடமை அல்லவா ?
உரிய திட்டமிடல் அதிகாரிகளே ! இக்குறைகளை நீக்கி உல்லாச துறையை அபிவிருத்திசெய்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி செய்யவேண்டும் என்பதே இப்பிரதேச மக்களினதும் இங்கு வருகைதரும் மக்களினதும் அவாவாகும்.